500 டன் காய்கறிகளை வைக்கும் வகையில் ஊட்டியில் குளிர் சாதன குடோன் அமைக்கும் பணி தீவிரம் - கலெக்டர் தகவல்


500 டன் காய்கறிகளை வைக்கும் வகையில் ஊட்டியில் குளிர் சாதன குடோன் அமைக்கும் பணி தீவிரம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 21 Dec 2018 10:15 PM GMT (Updated: 21 Dec 2018 7:55 PM GMT)

500 டன் காய்கறிகளை வைக்கும் வகையில் ஊட்டியில் குளிர் சாதன குடோன் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ், தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். விவசாயிகள் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசியதாவது:-

தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், 2017-2018, 2018-2019-ம் ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 254 ஹெக்டேர் பரப்பளவிற்கு கமலா ஆரஞ்சு நாற்றுகள் மானியத்துடன் வழங்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் விளையக்கூடிய பழ வகை நாற்றுகள் குன்னூர் பழவியல் நிலையத்தில் விற்பனை செய்யப்படுவதால், அதனை விவசாயிகள் வாங்கி பயனடையலாம். நீலகிரியில் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வை விவசாயிகளுக்கு ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு கிராமத்திலும் விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட உள்ளது.

கடந்த ஆண்டு மற்றும் நடப்பாண்டில் 3200 விவசாயிகளை கொண்டு 32 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து குழுக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூட்டு பண்ணைய திட்டத்தில் நீலகிரி மாவட்டத்தை இயற்கை வேளாண் மாவட்டமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், விவசாயிகள் உள்ளடக்கிய குழுக்களுக்கு இயற்கை வேளாண்மை செய்ய ஊக்குவிக்கப்படும். ஊட்டி நகராட்சி மார்க்கெட் பகுதியில் குளிர் சாதன குடோன் அமைக்க போதிய இடவசதி இல்லை. ஊட்டி ரோஜா பூங்கா பகுதியில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை மூலம் 500 டன் கொள்ளளவில் காய்கறிகளை வைக்கும் வகையில், குளிர் சாதன குடோன் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஊட்டி உழவர் சந்தையில் 82 கடைகளிலும் அனைத்து விவசாயிகளுக்கும் மின்னணு தராசுகள் வழங்கப்பட்டு உள்ளது. இந்த தராசுகள் அனைத்தும் முத்திரையிட்டு சரியாக செயல்பட்டு வருகிறது என்று வேளாண்மை விற்பனை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் உழவர் சந்தையில் இயற்கை வேளாண்மை மூலம் விளைவிக்கப்பட்ட காய்கறி கடைகள் தற்போது இல்லை. இதற்காக விவசாயிகள் விண்ணப்பித்தால் விளைபொருட்களை விற்க கடை ஒதுக்கப்படும்.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கோத்தகிரி, கூடலூர் ஆகிய தாலுகாக்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றது. நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க கிராமப்புறங்களில் உள்ள குடோன்களில் இயற்கை உரங்கள் அதிகளவில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கூடுதலாக கலப்பு உரங்கள் மற்றும் நேரடி உரங்களை இருப்பு வைக்க இயலாத நிலை காணப்படுகிறது என்று கூட்டுறவு நிறுவன அதிகாரி தெரிவித்து உள்ளார்.

கோமாரி நோய் தடுப்பூசி அனைத்து மாடுகளுக்கும் போடப்பட்டு வருகிறது. கோமாரி நோய் தடுப்பூசி மருந்துகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து வாங்கப்பட்டு கால்நடைத்துறை மூலம் போடப்படுகிறது. நீலகிரியில் கால்நடை பராமரிப்புத்துறையும், ஆவினும் இணைந்து தீவனப்பயிர் உற்பத்தி செய்யும் திட்டம் தமிழக அரசால் அறிவிக்கும் போது செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story