பொன்மாணிக்கவேல் மீது புகார்: காவல்துறை அதிகாரிகளின் பின்புலத்தில் யாரோ இருக்கிறார்கள் எச்.ராஜா குற்றச்சாட்டு


பொன்மாணிக்கவேல் மீது புகார்: காவல்துறை அதிகாரிகளின் பின்புலத்தில் யாரோ இருக்கிறார்கள் எச்.ராஜா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 22 Dec 2018 11:15 PM GMT (Updated: 22 Dec 2018 7:03 PM GMT)

பொன்மாணிக்கவேல் மீது புகார் கூறும் காவல்துறை அதிகாரிகளின் பின்புலத்தில் யாரோ இருக்கிறார்கள்’ என்று எச்.ராஜா குற்றம் சாட்டி உள்ளார்.

கோவை,

கோவை முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விதவையர் நல சங்கத்தின் 30-வது ஆண்டு விழா கோவை ஆவாரம்பாளையத்தில் நடந்தது. விழாவுக்கு, கோவை ஸ்மார்ட் சிட்டி அரிமா சங்க கோபால் அய்யர் தலைமை தாங்கினார். முன்னாள் படைவீரர் சங்கங்களின் கூட்டமைப்பு சேர்மன் சிவராஜ், கேப்டன் நேவி விஜி சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், அரிமா ஆளுனர் பி.கே.ஆறுமுகம், வட்டார தலைவர் ராதிகா மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில், பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு ராணுவ வீரர்களின் தியாகம், கடமை உணர்ச்சி பற்றி பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


பொன்மாணிக்கவேல் மீது புகார் அளித்த காவல்துறை அதிகாரிகளின் பின்புலத்தில் யாரோ இருக்கிறார்கள். மேலும் புகார் அளித்த அதிகாரிகளின் பொருளாதாரம் குறித்து விசாரிக்க வேண்டும். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 140-க்கும் மேற்பட்ட சிலைகளை மீட்டவர் நேர்மையானவரா? என்பது குறித்து மக்களிடம் தான் கேட்க வேண்டும்.

கோவை மாதம்பட்டியில் பூஜைகள் நடைபெறாமல் உள்ள ஒரு கோவிலை 2015-ம் ஆண்டில் இருந்து புனரமைக்க அந்த பகுதி மக்கள் இந்து சமய அறநிலையத்துறையிடம் மனு கொடுத்து காத்திருக்கிறார்கள். ஆனால் அறநிலையத்துறை கோவில்களை கைவிடுவதே சிலைகளை திருடுவதற்கு தான். சிலை கடத்தல் எப்படி நடக்கிறது என்பதை ஆதாரங்களுடன் சொல்லி வருகிறேன்.

கடந்த 50 ஆண்டுகள் திராவிட ஆட்சியில் இவ்வளவு சிலைகள் கடத்தப்பட்டது அவமானம் என்பதால், அதை மீட்பவருக்கு ஊக்கம் கொடுக்க வேண்டுமே தவிர சந்தேகப்படக்கூடாது. 40 ஆண்டுகளாக போராடி வந்த நிலையில் ராணுவத்தில் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்ற திட்டத்தை மோடி தலை மையிலான மத்திய அரசு தீர்த்து வைத்துள்ளது.

அன்னிய நாட்டின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் நம் ராணுவம் உயர்ந்துள்ளது. உலக அளவில் இந்தியாவின் ஜி.டி.பி. 7.3 சதவீதமாக உயர்ந்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story