அடிக்கடி சிக்னல் கோளாறால் தொடரும் தாமதம்: மின்சார ரெயில் பயணத்தில் விழி பிதுங்கும் பயணிகள்


அடிக்கடி சிக்னல் கோளாறால் தொடரும் தாமதம்: மின்சார ரெயில் பயணத்தில் விழி பிதுங்கும் பயணிகள்
x
தினத்தந்தி 24 Dec 2018 3:45 AM IST (Updated: 23 Dec 2018 11:09 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் அடிக்கடி நடக்கும் சிக்னல் கோளாறு பிரச்சினையால் மின்சார ரெயிலில் பயணிக்கும் பயணிகள் விழி பிதுங்கி வருகின்றனர். ‘இதுக்கு ஒரு முடிவே இல்லையா?’, என்று புலம்பி தவிக்கின்றனர்.

சென்னை,

வளர்ந்த நாடுகளுக்கு இணையான மக்கள் தொகையை பெற்றிருப்பது, சென்னை மாநகரம். இங்கு போக்குவரத்தில் பெரிதும் கைகொடுப்பது மின்சார ரெயில்களே. குறைந்த கட்டணம், விரைவான பயணம் என்பதால் மின்சார ரெயில்களுக்கு எப்போதுமே தலைநகரத்தில் மவுசு உண்டு. அதுவும் பிழைப்பு தேடி சென்னைக்கு வரும் வெளியூர் வாசிகள் வாடகை உள்ளிட்ட காரணங்களால் தங்கள் குடியிருப்புகளை புறநகர் பகுதிகளில் அமைத்து கொள்கின்றனர்.

இதனால் தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் போன்ற பகுதிகளில் வசிப்போர் கல்வி நிலையங்கள் மற்றும் அலுவலங்களுக்கு தினந்தோறும் சென்றுவர மின்சார ரெயில்களே பெரிதும் கைகொடுத்து வருகின்றன. எனவே எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் பல்லாயிரக்கணக்கான மக்களின் தேவையை மின்சார ரெயில்களே பூர்த்தி செய்து வருகின்றன.

இந்தநிலையில் தற்போது மின்சார ரெயில்கள் என்றாலே பயணிகள் விழிபிதுங்கி வருகின்றனர். அதற்கு மின்சார ரெயில் வழித்தடங்களில் ‘பீக் அவர்ஸ்’ எனப்படும் முக்கிய நேரங்களில் ஏற்படும் சிக்னல் கோளாறு பிரச்சினைகள் தான். பொதுவாகவே திட்டமிட்ட நேரத்தில் ரெயில்கள் புறப்படுவதும் கிடையாது, வருவதும் கிடையாது. இதனால் மின்சார ரெயில்கள் புறப்படுவதில் ஓரிரு நிமிடங்கள் தாமதம் ஏற்படுவது சகஜம்.

ஆனால் தற்போது மாநகர பஸ்களை மிஞ்சும் அளவுக்கு சிக்னல் பிரச்சினைகளில் சிக்கி பயணிகளை எரிச்சலின் எல்லைக்கே கொண்டு சேர்த்து விடும் அளவுக்கு மின்சார ரெயில் பயணங்கள் அமைந்து விடுகின்றன. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் செல்லவேண்டிய மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி விடுகின்றனர்.

உதாரணமாக தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில், 16 நிலையங்கள் கடந்து வர வேண்டியது உள்ளது. இந்த இடைவெளியில் ரெயில் நிலையங்கள் தவிர்த்து சுமார் 3 அல்லது 4 இடங்களில் ரெயில்கள் சிக்னல் கோளாறு பிரச்சினையால் நிறுத்தப்படுகின்றன. ஒவ்வொரு ரெயிலுக்கும் குறைந்தபட்சம் 10 நிமிடம் முதல் 15 நிமிடங்கள் இடைவெளி உள்ளது. இதில் சில மின்சார ரெயில்கள் திட்டமிடப்பட்ட நேரத்தில் வருவதும் கிடையாது.

இதனால் பயணிகள் காத்திருந்து காத்திருந்து அடுத்தடுத்து வரும் மின்சார ரெயிலில் ஏறிக்கொள்கின்றனர். ‘இந்த ரெயிலையும் விட்டுட்டா நம்ம கதி கந்தல் தான்’, என்று கருதி கடும் கூட்ட நெரிசலுடன் ரெயில்களில் பயணம் மேற்கொள்கின்றனர். படிக்கட்டிலும் பலர் தொங்கிக்கொண்டு செல்கின்றனர். தேனடையை சுற்றி தேனீக்கள் மொய்ப்பது போல மின்சார ரெயிலில் எங்கெல்லாம் பயணிக்க முடியுமோ, அங்கெல்லாம் பயணிகள் தொற்றிக்கொண்டு விடுகின்றனர்.

இதனால் கண்ணீர் வடிக்காத குறையாக மின்சார ரெயில்களில் பயணிக்கின்றன. ஆர்வ மிகுதியில் படிக்கட்டில் தொங்கும் இளைய தலைமுறையினர், எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி தங்கள் உயிரை இழந்து விடுகின்றனர். அதேவேளை முதியோர், பெண்கள் கடுமையான மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர்.

நகரில் உள்ள பல நிறுவனங்கள் தங்கள் வருகை பதிவேட்டை மிகவும் கண்டிப்புடன் கவனித்து கொள்கிறார்கள். சில நிமிட தாமதம் என்றாலும் அபராதம், கட்டாய விடுப்பு என்று தண்டனை கொடுத்து விடுகிறார்கள். சில நிறுவனங்கள் மட்டுமே ஊழியர்களின் மனநிலையை புரிந்துகொண்டு மன்னித்து விடுகின்றனர். இதனால் ‘குறிப்பிட்ட நேரத்துக்குள் சென்றுவிடுவோமா?, இதுக்கு ஒரு முடிவே இல்லையா?’ என்பதே மின்சார ரெயிலில் பயணிப்போரின் 80 சதவீதம் பேரின் எண்ண ஓட்டமாக இருக்கிறது.

இதுகுறித்து பயணிகள் சிலர் கூறியதாவது:- குறிப்பிட்ட நேரத்துக்குள் அலுவலகத்துக்கு சென்றுவிட வேண்டும் என்பதால் தான் காலையிலேயே வேகமாக வீட்டில் இருந்து கிளம்புகிறோம். காலை உணவை கூட மின்சார ரெயிலிலேயே முடிப்போர் ஏராளம். அத்தனையையும் கடந்து ரெயிலில் பயணிக்கையில் அடிக்கடி சிக்னல் கோளாறு என்றால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்? சிக்னல் கோளாறுக்காக ஒவ்வொரு தடவையும் மின்சார ரெயில் 5 முதல் 7 நிமிடங்கள் நிறுத்தப்படுகிறது. 4 தடவை நிறுத்தப்படும் போது கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் வீணாகி விடுகின்றன.

இந்த பிரச்சினை காலை 8 மணி முதல் 10 மணி வரையிலான நேரங்களில் தான் பெரிதும் நிகழ்கிறது. இந்த நிலை மாற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். ரெயில்வே ஊழியர்களும் இப்பிரச்சினையை சமாளிக்கும் வகையில் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story