கோவை மாவட்டத்தில் 15 ஆயிரம் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் வேலை நிறுத்தம் - ஏ.டி.எம்.மில் பணம் இல்லாமல் பொதுமக்கள் தவிப்பு


கோவை மாவட்டத்தில் 15 ஆயிரம் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் வேலை நிறுத்தம் - ஏ.டி.எம்.மில் பணம் இல்லாமல் பொதுமக்கள் தவிப்பு
x
தினத்தந்தி 27 Dec 2018 3:45 AM IST (Updated: 27 Dec 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் 15 ஆயிரம் பேர் நேற்று வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் வங்கிப்பணி பாதிக்கப்பட்டது. மேலும் ஏ.டி.எம்.களில் பணமின்றி பொதுமக்கள் தவிப்புக்குள்ளானார்கள்.

கோவை,

பரோடா, விஜயா, தேனா வங்கிகளின் இணைப்பை கைவிட வேண்டும். மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு இணையான ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் பொதுத்துறை வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.கோவை மாவட்டத்தில் 850 கிளைகளில் பணியாற்றும் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் 15 ஆயிரம் பேர் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால் பெரும்பாலான வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன. பண பரிவர்த்தனை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அவதியடைந்தனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ஸ்டேட் வங்கி தலைமை அலுவலகம் முன்பு வங்கி அதிகாரிகள்,ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு வங்கி அதிகாரிகள் சங்க மாவட்ட செயலாளர் ராஜவேலு, ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் பெண் ஊழியர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறும் போது, கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்டத்தில் நேற்று அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட 15 ஆயிரம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.500 கோடி பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டது என்று தெரிவித்தனர்.

வங்கி ஊழியர்கள் போராட்டம் காரணமாகவும், ஏற்கனவே தொடர்ந்து விடுமுறை நாட்கள் காரணமாகவும் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பபடாததால் பெரும்பாலான ஏ.டி.எம்.களில் பணம் இன்றி பொதுமக்கள் தவித்தனர். இதனால் ஏ.டி.எம்.கள் வெறிச்சோடி காணப்பட்டன. பணம் இருந்த ஏ.டி.எம். மையங்களை நோக்கி பொதுமக்கள் படையெடுத்தனர். இதனால் பணம் இருந்த ஏ.டி.எம். மையங்களில் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது.

Next Story