வேலைநிறுத்தம் நீடிப்பு: கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


வேலைநிறுத்தம் நீடிப்பு: கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Dec 2018 10:45 PM GMT (Updated: 26 Dec 2018 9:54 PM GMT)

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நாமக்கல்,

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஒரே அரசாணையின் மூலம் மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இவர்களின் போராட்டம் நேற்று 16-வது நாளாக நீடித்தது.

நாமக்கல் மாவட்டத்தில் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் மொத்தம் உள்ள 311 கிராம நிர்வாக அலுவலர்களில் 177 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் மாவட்டத்தில் இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பித்த சுமார் 75 ஆயிரம் விண்ணப்பங்கள் தேங்கி இருப்பதாக சங்க நிர்வாகிகள் கூறினர்.

இந்தநிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் தாலுகா அலுவலகங்கள் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாமக்கல் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட தலைவர் செந்தில்கண்ணன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். மகளிர் அணி தலைவி தமிழரசி வரவேற்று பேசினார். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் வட்ட பொருளாளர் ராமன் நன்றி கூறினார்.


Next Story