அரியலூர் மாவட்டத்தில் 6 இடங்களில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்


அரியலூர் மாவட்டத்தில் 6 இடங்களில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 Dec 2018 3:12 AM IST (Updated: 28 Dec 2018 3:12 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் 6 இடங்களில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். அதன் விவரம் வருமாறு:-

அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் செங்கமுத்து கூறுகையில், படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அதிகளவில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு அரசு வழங்கிய ஊக்க தொகையை சர்க்கரை ஆலை நிர்வாகம் முழுமையாக வழங்க வேண்டும் என்றார்.

இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயலர் ராசேந்திரன் கூறுகையில், வரலாற்றுச்சிறப்பு மிக்க கண்டராதித்தம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதனை தூர்வாரி அணைகளாக மாற்ற வேண்டும். மேலும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாருவதற்கு அதிக செலவாகும் என்பதால், தற்போது நடைபெற்று வரும் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்கு ஏரி, குளங்களில் உள்ள மண்ணை எடுத்து பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும். ஏரி, குளங்கள் தூர்வாரப்படுவதுடன், மாவட்ட நிர்வாகத்துக்கும் ஏரிகளை தூர்வாரும் செலவினங்களும் குறையும், விவசாயத்துக்கும் தண்ணீர் தேக்கி வைக்க முடியும். பொதுமக்களின் எதிர்ப்பை மீறி திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் திறக்கப்பட்ட மணல் குவாரியில் விதி மீறல்கள் உள்ளது. இது குறித்து தெரிவித்தால் பொதுப்பணித்துறையினர் அலட்சியப்படுத்தி வருகின்றனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் இந்த மணல் குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். படை புழுவால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். மருதையாற்றின் இருபுறமும் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் இணைப்புக்காக தட்கல் முறையில் பணம் செலுத்தி காத்துக்கிடக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றார்.

தமிழக அம்பேத்கர் விவசாய இயக்க தலைவர் அம்பேத்கர்வழியன் கூறுகையில், சுக்கிரன் ஏரியை நம்பியுள்ள 25 கிராம மக்கள் சாகுபடி செய்துள்ள நெற்பயிரை காப்பாற்ற புள்ளம்பாடி வாய்க்காலில் கூடுதல் தண்ணீரை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இளம் நெற்பயிர்களில் வெள்ளபூச்சி, செம்படையான் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் அரியலூர் மாவட்டத்தில் திருமழபாடி, தூத்தூர், அழகியமணவாளம், திருமானூர், ஏலாக்குறிச்சி, ஸ்ரீபுரந்தான் ஆகிய 6 இடங்களில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும். திருமானூரை தலைமையிடமாக கொண்டு தனி வருவாய் வட்டம் அமைக்க வேண்டும். மருதையாற்றின் உபரி நீரை கருப்பில்லா கட்டளை ஓடை வழியாக சுக்கிரன் ஏரிக்கு திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன் கூறுகையில், திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை பணிக்கு கண்டராதித்தம், பொன்னேரியில் இருந்து மண் எடுத்துக்கொள்ள மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும். பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு வழங்க கூடிய பாக்கித் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியநாகலூர், தூத்தூர், வைப்பூர், கோமான் போன்ற பகுதியில் உள்ள மின் கம்பங்கள் மிகவும் மோசமாக உள்ளதால் அதனை சீர் செய்யவேண்டும். ஜெயங்கொண்டம், தஞ்சாவூருக்கு நேரடி பஸ் வசதி செய்து தரவேண்டும். திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் குவாரியை மூட வேண்டும் என்றார்.

தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு கலெக்டர் விஜயலட்சுமி பதில் அளித்தார். முன்னதாக விவசாயி நெல் ஜெயராமன் மற்றும் வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் அய்யன்சாமி ஆகியோர் மறைவிற்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், வேளாண் துணை இயக்குனர் (பொறுப்பு) இளங்கோவன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அன்புராஜன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பழனிவேல் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், ஏராளமான விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story