மேகதாது அணை விவகாரத்தில் தலையிட கோரிக்கை : பிரதமர் மோடியுடன் குமாரசாமி சந்திப்பு


மேகதாது அணை விவகாரத்தில் தலையிட கோரிக்கை : பிரதமர் மோடியுடன் குமாரசாமி சந்திப்பு
x
தினத்தந்தி 28 Dec 2018 12:18 AM GMT (Updated: 28 Dec 2018 12:18 AM GMT)

டெல்லியில் பிரதமர் மோடியை முதல்-மந்திரி குமாரசாமி நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர், மேகதாது திட்ட பிரச்சினையில் தலையிடுமாறும், மகதாயி நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடவும் கோரிக்கை விடுத்தார்.

பெங்களூரு,

கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் டெல்லி சென்றார்.

நேற்று முன்தினம் மத்திய நீர்ப்பாசனத்துறை மற்றும் தரைவழி போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரியை சந்தித்து குமாரசாமி பேசினார். அப்போது மேகதாது அணை விவகாரத்தில் சுமுக தீர்வு காண தமிழகம்-கர்நாடக முதல்-மந்திரிகள் கூட்டத்தை கூட்ட அவர் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட மத்திய மந்திரி நிதின் கட்காரி, இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.

அதைதொடர்ந்து நேற்று மாலை குமாரசாமி, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது அவர் மேகதாது திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கும்படி பிரதமரிடம் கோரிக்கை வைத்தார்.

மேலும் பல்வேறு துறைகளின் மத்திய மந்திரிகளை நேரில் சந்தித்து கர்நாடக வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் டெல்லியில் கர்நாடக பவனில் குமாரசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அருண்ஜெட்லி, சுரேஷ்பிரபு, பியூஸ்கோயல் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து, கர்நாடக திட்டங்கள் குறித்து விவாதித்தேன். பிரதமரிடம், நீர்ப்பாசன திட்டங்கள், வறட்சி நிவாரணம், வேைல உறுதி திட்டம் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்க கோரி மனு கொடுத்தேன்.

காவிரி நதிநீர் பிரச்சினையில் நடுவர் மன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள தீர்ப்புகளை அமல்படுத்தும் நோக்கத்தில் மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த அணையில் சுமார் 67 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீரை தேக்க முடியும்.

சுப்ரீம் கோர்ட்டு, பெங்களூருவின் குடிநீ்ர் தேவைக்கு கூடுதலாக 4.75 டி.எம்.சி. நீரை ஒதுக்கீடு செய்துள்ளது. இதை பயன்படுத்தவும், 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும் புதிய அணை கட்டப்படுகிறது. இதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த பிரச்சினையில் தலையிடுமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன்.

அதே போல் கிருஷ்ணா நடுவர் மன்றம் கர்நாடகத்திற்கு 166 டி.எம்.சி. நீரை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நீரை பயன்படுத்தும் நோக்கத்தில் கிருஷ்ணா மேல் அணை திட்டத்தை அமல்படுத்துகிறோம். இந்த நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடுமாறு கோரிக்கை விடுத்தேன்.

மகதாயி நதி நீர் பிரச்சிைனயில் கர்நாடகத்திற்கு 13.42 டி.எம்.சி. நீரை நடுவர் மன்றம் ஒதுக்கீடு செய்துள்ளது. கலசா-பண்டூரி உள்பட பல்வேறு குடிநீர் திட்டங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது. இந்த திட்டங்களை அமல்படுத்த வசதியாக நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடுமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன்.

கிருஷ்ணா மேல் அணை 3-வது நிலை திட்டத்தை தேசிய திட்டம் என்று அறிவித்து அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய ேவண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.51 ஆயிரத்து 148 கோடி ஆகும்.

இந்த திட்டம் மூலம் வட கர்நாடகத்தில் உள்ள விஜயாப்புரா, பாகல்கோட்டை, ராய்ச்சூர், கலபுரகி, யாதகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயநிலங்கள் பாசன வசதியை பெறும். கர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. அதனால் 33 சதவீத பயிர் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் விதிமுறைகளை மாற்ற வேண்டும் என்று கோரினேன்.

வறட்சி நிவாரண பணிகளுக்கு ரூ.2,434 கோடி வழங்குமாறு கேட்டுள்ளேன். கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.2,538 கோடி கர்நாடகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டியுள்ளது. அந்த பாக்கி தொகையை உடனே விடுவிக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன்.

மத்திய மந்திரி நிதின்கட்காரியிடம், பல்வேறு நெடுஞ்சாலை திட்டங்களை நிறைவேற்றுமாறு மனு கொடுத்துள்ளேன். மேகதாது திட்ட பிரச்சினையில் இருமாநில முதல்-மந்திரிகளின் கூட்டத்தை கூட்டுவதாக அவர் உறுதி அளித்துள்ளார்.

மத்திய மின்சாரத்துறை மந்திரி பியூஸ்கோயலை சந்தித்து, அனல்மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தேன். பீதர்-நாந்தேட் 154 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய ரெயில் பாதை அமைக்க மனு கொடுத்தேன்.

சரக்கு-சேவை வரி திட்டத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகை வழங்கும் காலக்கெடுவை 2025-ம் ஆண்டு வரை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று நிதி மந்திரியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

இந்த சரக்கு-சேவை வரி திட்டம் அமலுக்கு வந்த பிறகு மாநிலத்திற்கான வரி வருவாயில் 20 சதவீதம் வரை குறைவு ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் வரி வசூலிக்கும் முறை பலப்படுத்தப்பட்டு உள்ளது. மத்திய விமானத்துறை மந்திரி சுரேஷ்பிரபுவை நேரில் சந்தித்து, பல்வேறு நகரங்களில் விமான நிலையங்களை அமைப்பது குறித்து விவாதித்தேன்.

அதாவது ஹாசன், சிக்கமகளூரு, சிவமொக்கா, விஜயாப்புரா மற்றும் கார்வார் ஆகிய நகரங்களில் விமான நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். பீதரில் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதை விரைவாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்.

பெங்களூரு எலகங்காவில் உள்ள ஹெலிகாப்டர் பயிற்சி மையத்தை மைசூருவுக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்தேன். மேலும் மைசூரு விமான நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story