சம்பா நெற்பயிரில் பேரிழப்பை ஏற்படுத்தும் புகையான் நோய் டெல்டா விவசாயிகள் கவலை


சம்பா நெற்பயிரில் பேரிழப்பை ஏற்படுத்தும் புகையான் நோய் டெல்டா விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 30 Dec 2018 4:15 AM IST (Updated: 30 Dec 2018 3:39 AM IST)
t-max-icont-min-icon

சம்பா நெற் பயிர் புகையான் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதால் பேரிழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.

காட்டுமன்னார்கோவில், 

கடலூர் மாவட்டத்தில் காவிரியின் கடைமடை பகுதியாக காட்டுமன்னார் கோவில், லால்பேட்டை, குமராட்சி, சிதம்பரம், புவனகிரி ஆகிய பகுதிகள் இருந்து வருகிறது. இந்த பகுதிக்கு நீர் ஆதாரமாக கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள கீழணையில் இருந்து வரும் பாசன வாய்க்கால்கள் மற்றும் வீராணம் ஏரி உள்ளது.

இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் வந்ததால், கடைமடை பகுதியான கடலூர் மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடியை கடந்த அக்டோபர் மாதம் ஆர்வத்துடன் தொடங்கினர். காட்டுமன்னார் கோவில் குமராட்சி பகுதியில் மட்டும் சுமார் 45 ஆயிரம் ஏக்கரில், நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு பணி மூலமாக விவசாயிகள் சாகுபடியை தொடங்கினார்கள்.

தற்போது நெற்பயிர்கள் அனைத்தும் நன்கு செழித்து வளர்ந்து வந்துள்ளது. இதில் முன்கூட்டியே நடவு செய்த பகுதிகளில் அறுவடை பணிகள் தொடங்கி விட்டது. இருப்பினும் தை மாதம் தொடக்கத்தில் தான் அறுவடை பணிகள் தீவிரமாக இருக்கிறது. இதற்காக விவசாயிகள் தங்களை தயார் செய்து வந்தனர்.

இந்த சூழ்நிலையில் சம்பா பயிரை தாக்கும் மஞ்சள் நோய், புகையான் நோய் விவசாயிகளின் தலையில் பெரும் இடியாக இறங்கி இருக்கிறது. குமராட்சி பகுதியில் விளத்தூர், வீரநத்தம், திருநாறையூர், எடையார், பிள்ளையார்தாங்கல், வவ்வால்தோப்பு உள்பட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பயிர் செய்திருந்த சம்பா பயிரில் இந்த வகை நோய் தாக்குதல் அதிகமாக இருக்கிறது.

இதனால் கடைகளில் மருந்து வாங்கி அடித்தும் இன்னும் நோய் கட்டுக்குள் வரவில்லை. மாறாக தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. புகையான் நோய் தாக்குதலுக்கு உள்ளான பயிர்களில் நெற்கதிர்கள் நன்கு செழித்து வளராமல் போய்விடும். இதனால் மகசூல் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கவலைபட தெரிவிக்கிறார்கள்.

விழிப்புணர்வு இல்லை

இதுபற்றி கொள்ளிடம் கீழணை, பாசன விவசாயிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி கூறுகையில், கஜா புயல் வந்த பின்னர் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் உள்ளது. கடுமையான குளிரும் இருக்கிறது. இந்த காரணத்தால் தான் நெற்பயிர்களை புகையான் நோய் தாக்குகிறது. நன்கு வெயில் அடித்தால் ஓரளவிற்கு நோய் தாக்குதல் குறைய வாய்ப்பு இருக்கிறது.

புகையான் நோய் பற்றி விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை தெரிவிக்க வேளாண் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதற்கு முன்பு வேளாண் அதிகாரிகள் கிராமங்கள் தோறும் வந்து விழிப்புணர்வு செய்வார்கள். ஆனால் இந்த ஆண்டு எங்களை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை.

புகையான் நோய் நெற்பயிரின் அடிப்பகுதியை தான் தாக்கும். இதனால் அதில் உள்ள நீர்சத்துக்களை உறிஞ்சி, நெல் மணிகளை விளைய விடாமல் செய்வதால், மகசூல் பாதியாக குறைந்துவிடும். 3 முறைக்கு மேல் மருந்து அடித்தும் நோயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

தற்போது சில இடங்களில் அறுவடை பணி தொடங்கி விட்டது. இங்கு புகையான் நோயால் தாக்குதலுக்கு உள்ளான நெல் எடை குறைவாக இருக்கும் என்பதால், அதை வியாபாரிகள் வாங்குவதற்கு முன்வராமல், ஒதுக்கிவிடுகிறார்கள். இந்த குறையை போக்க மாவட்ட நிர்வாகம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து விவசாயிகளிடம் இருந்து நெல்லினை கொள்முதல் செய்ய வேண்டும்.

புகையான் நோய் தாக்குதல் இல்லாத ஊர்களே கிடையாது. இது டெல்டா விவசாயிகளுக்கு பெரிய இழப்பு தான். அவர்களை மீட்க வேளாண் அதிகாரிகள் முழுவீச்சில் கள ஆய்வு செய்ய வேண்டும். பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு, உரிய தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபற்றி விளத்தூரை சேர்ந்த விவசாயி பாலு என்பவர் கூறுகையில், சுமார் 3 ஏக்கரில் சம்பா நடவு செய்துள்ளேன். நான்கு முறை மருந்து அடித்தும் புகையான் நோயை கட்டுப்படுத்த முடியவில்லை. நெற்கதிர்களில் பயிர்கள் இல்லாமல் இருக்கிறது. ஏற்கனவே வறட்சி, வெள்ளம் போன்ற காரணங்களால் கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டோம். தற்போது நோய் தாக்குதலால் நாங்கள் மீண்டும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறோம் என்று கவலையுடன் தெரிவித்தார். 

Next Story