சாத்தூர் அருகே 3 வாகனங்கள் மோதல்: ஆம்னி பஸ்-டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து 31 பேர் காயம்


சாத்தூர் அருகே 3 வாகனங்கள் மோதல்: ஆம்னி பஸ்-டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து 31 பேர் காயம்
x
தினத்தந்தி 29 Dec 2018 10:30 PM GMT (Updated: 29 Dec 2018 11:28 PM GMT)

சாத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர், ஆம்னி பஸ், சமையல் எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி ஆகிய 3 வாகனங்கள் விபத்தில் சிக்கின. இதில் லாரி, பஸ்சில் இருந்த 31 பேர் காயம் அடைந்தனர்.

சாத்தூர், 

தூத்துக்குடியில் இருந்து சமையல் எண்ணெய் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று மதுரையை நோக்கி வந்து கொண்டிருந்தது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஒரு மில் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, எதிர்பாராதவிதமாக திடீரென ஒரு டிராக்டர் நெடுஞ்சாலையை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது டேங்கர் லாரி, டிராக்டர் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்தது.

அதில் லாரி எதிர்பகுதிக்கு சென்று கோவையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை நோக்கி சென்ற ஆம்னி பஸ் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் லாரியும், பஸ்சும் சாலையில் கவிழ்ந்தன. இதனால் டேங்கர் லாரியில் இருந்து கொட்டிய சமையல் எண்ணெய் சாலையில் ஓடியது.

இந்த விபத்தில் டேங்கர் லாரியை ஓட்டிவந்த தூத்துக்குடியை சேர்ந்த சக்திமுருகனின் (வயது 26) கால்முறிந்தது. இதே போல் ஆம்னி பஸ்சில் பயணம் செய்த 30 பேர் காயம் அடைந்தனர்.

இதில் பலத்தகாயம் அடைந்த நெல்லை பேட்டையை சேர்ந்த முகமதுஅலி(28) பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தை சேர்ந்த விமல்சங்கர்(30) செங்கோட்டை பார்டரை சேர்ந்த கார்த்திக்(22), அம்பாசமுத்திரம் நெட்டகுடியை சேர்ந்த தூர்க்காதேவி(22) திருப்பூரை சேர்ந்த வினோதா கலைசெல்வி(53), நெல்லை பெருமாள்புரத்தை சேர்ந்த ஹரிகரன்(29), பாளையங்கோட்டையை சேர்ந்த சிவராமகுமார்(24), குரும்பூரை சேர்ந்த தனசீலன்(55), குரும்பூர் அருகே காணியாழன்புதூரை சேர்ந்த ஆனந்தன்(70), நெல்லை நரசிங்கம்நகரை சேர்ந்த மகாசுப்பிரமணியன்(28) உள்ளிட்டோர் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து, டிராக்டர் டிரைவர் புல்முகமதுமியாவை(33) கைது செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story