சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் லட்டு தயாரிக்கும் பணி தொடங்கியது


சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் லட்டு தயாரிக்கும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 1 Jan 2019 4:00 AM IST (Updated: 1 Jan 2019 3:43 AM IST)
t-max-icont-min-icon

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க லட்டு தயாரிக்கும் பணி தொடங்கியது.

சுசீந்திரம்,

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இங்கு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வருகிற 5-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்று அதிகாலை 4 மணிக்கு ராமபிரானுக்கு அபிஷேகமும், 6 மணிக்கு ஆயிரக்கணக்கான லிட்டர் பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், எலுமிச்சை சாறு, மஞ்சள், சந்தனம், களபம், குங்குமம், மாதுளை, பன்னீர், விபூதி உள்பட 16 வகையான பொருட்களால் அடங்கிய சோடச அபிஷேகம் நடக்கிறது.

அபிஷேகம் முடிந்தவுடன் மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெறும். பகல் 11 மணி முதல் மாலை 5 மணி வரை கோவில் கலையரங்கம், எஸ்.எம்.எஸ்.எம். மேல்நிலைப்பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

லட்டு பிரசாதம்

மேலும், அன்றைய தினம் சாமி தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதமாக லட்டு வழங்கப்படும். இதற்காக லட்டு தயாரிக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணி 3 -ந் தேதி வரை நடைபெறும் என தெரிகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான லட்டுகள் தயாரிக்கப்படும். இந்த பணியில் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று இரவு 7 மணிக்கு ஆஞ்சநேயர் சாமிக்கு விதவிதமான பூக்களால் புஷ்பாபிஷேகமும், 11 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில் நிர்வாகமும், பக்தர்களும் ஊர் பொதுமக்களும் இணைந்து செய்து வருகிறார்கள். 

Next Story