புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தை காண கன்னியாகுமரி கடற்கரையில் திரண்ட சுற்றுலா பயணிகள்


புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தை காண கன்னியாகுமரி கடற்கரையில் திரண்ட சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 1 Jan 2019 10:45 PM GMT (Updated: 1 Jan 2019 3:01 PM GMT)

புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தை காண கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் திரண்டனர். ‘செல்பி’ எடுத்து சூரிய உதயத்தை உற்சாகமாக வரவேற்றனர்.

கன்னியாகுமரி,

சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் புத்தாண்டை கொண்டாட நேற்றுமுன்தினம் காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கினர். இதனால் லாட்ஜ் அறைகள் நிரம்பி காணப்பட்டது.

இரவு முக்கடலும் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடற்கரையில் புத்தாண்டை கொண்டாட ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டை வரவேற்று கோ‌ஷமிட்டனர். ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் பலர் அங்கு ‘கேக்’ வெட்டி புத்தாண்டை வரவேற்றனர்.

இதேபோல் கன்னியாகுமரியில் உள்ள பல ஓட்டல்களில் இசை கச்சேரி, அறுசுவை உணவுடன் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. வெளிமாநில சுற்றுலா பயணிகளும் புத்தாண்டை வரவேற்று ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதே சமயத்தில் நேற்று புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தை காணவும் கன்னியாகுமரி கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். சூரிய உதயத்தை பார்த்ததும் பலர் கைகூப்பி வணங்கினர். சிலர் சூரிய உதயத்தை ‘செல்பி’எடுத்து உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகில் சென்று பொழுதை போக்கினர்.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கன்னியாகுமரியில் நேற்று கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. நெரிசலை தவிர்க்க போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தினர்.

Next Story