கொண்டயம்பேட்டையில் பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரம்


கொண்டயம்பேட்டையில் பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரம்
x
தினத்தந்தி 2 Jan 2019 4:00 AM IST (Updated: 2 Jan 2019 2:48 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே கொண்டயம்பேட்டையில் பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி, 

அறுவடைத்திருநாள் எனப்படும் தைப்பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 13 நாட்களே உள்ளன. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையன்று வீடுகளில் மண்பானையில் பச்சரிசியால் பொங்கலிட்டு சூரியபகவானுக்கு படையலிட்டு வழிபடுவது தமிழர்களின் வழக்கமாகும். நகரம், கிராமம் என்ற பாகுபாடு இன்றி அனைத்து குடும்பங்களிலும் மண்பானையில் பொங்கலிடுவது தொன்று தொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் மரபாக உள்ளது.

திருச்சி திருவானைக்காவல் அருகே உள்ள கொண்டயம்பேட்டையில் பொங்கல் பானைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றங்கரையில் குடிசைகள் அமைத்து தொழிலாளர்கள் பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். முழுமை பெற்ற பொங்கல் பானைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து உள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொங்கல் பானைகள் தயாரிக்கப்பட்டு வந்தாலும், காவிரி கரை மண்ணில் தயாரிக்கப்படும் பொங்கல் பானைகளுக்கு தான் தனி மவுசு உள்ளது. இதனால் வியாபாரிகள் நேரடியாக இங்கு வந்து பொங்கல் பானைகளை வாங்கி செல்கிறார்கள்.

பொங்கல் பானை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஒரு தொழிலாளி கூறுகையில் ‘பொங்கல் பானை விற்பனை இன்னும் சூடு பிடிக்கவில்லை. நாகரிக மோகம் அதிகரித்து வருவதால் மண்பானைகளில் பொங்கலிடுவதை மக்கள் மறந்து வருகிறார்கள். ஏற்கனவே கோவில் சன்னதிகளில் விளக்கு ஏற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் மண்ணால் தயாரிக்கப்படும் அகல் விளக்கு விற்பனை அடியோடு முடிந்து போய்விட்டது. மண் பானை, மண்சட்டி சமையலுக்கு மக்கள் மாறினால் எங்கள் வாழ்வாதாரம் மேம்படும்’ என்றார். 

Next Story