கடந்த ஆண்டில் நடந்த வாகன விபத்துகளில் 537 பேர் சாவு


கடந்த ஆண்டில் நடந்த வாகன விபத்துகளில் 537 பேர் சாவு
x
தினத்தந்தி 1 Jan 2019 10:15 PM GMT (Updated: 2019-01-02T03:47:28+05:30)

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் நடந்த வாகன விபத்துகளில் 537 பேர் இறந்துள்ளனர். 4,362 பேர் காயம் அடைந்தனர்.

விழுப்புரம், 

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம் உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளுக்கு அடுத்தாற்போல் முக்கிய பெருநகரமாக விளங்கி வருகிறது விழுப்புரம். தமிழகத்தில் அதிக தூரம் மாநில நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளை கொண்ட மாவட்டமாகவும் விழுப்புரம் உள்ளது. சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, புதுச்சேரி நெடுஞ்சாலை, திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை, கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை, கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை, உளுந்தூர்பேட்டை- சேலம் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலைகள் விழுப்புரம் மாவட்டத்தின் வழியாக செல்கிறது.

இதனால் எந்நேரமும் விழுப்புரம் மாவட்டத்தில் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும். இந்த வாகன போக்குவரத்து நெரிசலால் தினம், தினம் சாலை விபத்துகள் நடந்து வருகிறது.

ஆனால் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஜெயக்குமார் பொறுப்பேற்றதில் இருந்து சாலை விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் முதல் அனைத்து தரப்பு பொதுமக்களிடமும் சாலை பாதுகாப்பு குறித்தும், விபத்துகளை தடுப்பது குறித்தும் காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. காவல்துறையினர் சார்பில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகளின் விளைவாக 2017-ம் ஆண்டை காட்டிலும் கடந்த 2018-ம்ஆண்டுவிபத்துகளில் பலியானவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 3,256 சாலை விபத்துகள் நடந்துள்ளது. இதில் 537 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4,362 பேர் காயத்துடன் உயிர் தப்பியுள்ளனர்.

கடந்த 2017-ம் ஆண்டு 3 ஆயிரத்து 577 சாலை விபத்துகள் நடந்துள்ளது. இதில் 811 பேர் இறந்துள்ளனர். 5 ஆயிரத்து 148 பேர் காயமடைந்துள்ளனர். சாலை விபத்துகளை தடுக்க போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் தாறுமாறாகவும், அதிவேகமாக செல்வதாலும்தான் தொடர் விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. எனவே தற்போது பிறந்துள்ள 2019-ம் ஆண்டில் சாலை விபத்துகளை மேலும் குறைக்கும் வகையிலும், விபத்தில்லா மாவட்டமாக விழுப்புரத்தை உருவாக்கும் வகையிலும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து செல்ல வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Next Story