திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் அபராதம் விதிப்பு


திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் அபராதம் விதிப்பு
x
தினத்தந்தி 4 Jan 2019 3:45 AM IST (Updated: 3 Jan 2019 10:46 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

மீஞ்சூர்,

தமிழக அரசு உத்தரவின்படி 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின் பேரில் மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் யமுனா தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் அடங்கிய குழுவினர் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தடை செய்யப்பட்ட 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பொன்னேரி ஆர்.டி.ஓ. நந்தகுமார், தாசில்தார் புகழேந்தி, செயல் அலுவலர் பாஸ்கர், சுகாதார அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் பேரூராட்சியில் அடங்கிய திருவொற்றியூர் நெடுஞ்சாலை, ஹரிஹரன் சாலை, புதிய தேரடி தெரு உள்பட பல்வேறு கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கடைகளில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன்னுக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் பூண்டி, பென்னாலுார்பேட்டை சுற்றுவட்டார கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டு 150 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 10 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆரணி பேரூராட்சி செயல் அலுவலர் மாலா தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் ஆரணியில் உள்ள பஜார் தெரு, பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய 3 வியாபாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இந்த ஆய்வில் 50 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பள்ளிப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் உள்ள கடைகளில் பேரூராட்சி ஊழியர்கள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

இதில் பள்ளிப்பட்டு பஜார் தெரு, மேற்கு தெரு, பஸ் நிலையம், நகரி ரோடு, சோளிங்கர் ரோடு போன்ற பகுதிகளில் உள்ள கடைகளில் இருந்து 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

காஞ்சீபுரம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மகேந்திரன் உத்தரவின் பேரில், காஞ்சீபுரம் நகராட்சி நகர் நல அதிகாரி முத்து மற்றும் சுகாதாரத்துறையினர் காந்திரோட்டில் உள்ள 6 ஜவுளி கடைகளுக்கு விரைந்து சென்றனர். அங்கு, கடைகாரர்களிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருக்கிறதா? என்று கேட்டனர். ஆனால் மற்ற 5 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருக்கிறது என்று ஜவுளி கடைக்காரர்கள் கூறியதால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஒரு ஜவுளி கடையில் பிளாஸ்டிக் பொருட்கள் இல்லை என்று கடைக்காரர் தெரிவித்தனர். அதிகாரி முத்துவுக்கு சந்தேகம் ஏற்படவே ½ மணி நேரம் அந்த கடையில், அமர்ந்திருந்தார். பின்னர் அவர் கடையின் பின்புறம் உள்ள கழிவறைக்கு சென்று பார்த்தபோது அந்த கடையில் தடை செய்யப்பட்ட 450 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அதிகாரிகளிடம் பொய்யான தகவலை கூறியதால் கடைக்கு நகர்நல அலுவலர் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார். மற்ற 5 கடைகாரர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் விதித்தார்.

Next Story