சிறுமியை திருமணம் செய்து சித்ரவதை, தலைமறைவாக இருந்த வாலிபர் கைது


சிறுமியை திருமணம் செய்து சித்ரவதை, தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 4 Jan 2019 10:30 PM GMT (Updated: 4 Jan 2019 10:39 PM GMT)

சிறுமியை திருமணம் செய்து சித்ரவதை செய்த வழக்கில் விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம், 

பெண்ணாடத்தை சேர்ந்தவர் பாபு (வயது 32). இவர் கடந்த 2014-ம் ஆண்டு அன்று சேலத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னர் அந்த சிறுமியை பாபு மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்தி வந்தனர்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலரிடமும், விருத்தாசலம் மகளிர் போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுத்தார். அதன்பேரில் பாபு உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணை கடலூர் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் பாபு, கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். எனவே அவரை பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு நீதிபதி லிங்கேஸ்வரன் உத்தரவிட்டார். இதையடுத்து பாபுவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் பெண்ணாடத்தில் பதுங்கியிருந்த பாபுவை நேற்று போலீசார் கைது செய்து கடலூர் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பாபுவை கடலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி லிங்கேஸ்வரன் உத்தரவிட்டார். இதையடுத்து பாபு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story