ஐகோர்ட்டு வக்கீலை தாக்கியதாக விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 3 பேர் மீது வழக்கு


ஐகோர்ட்டு வக்கீலை தாக்கியதாக விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 5 Jan 2019 10:59 PM GMT (Updated: 5 Jan 2019 10:59 PM GMT)

ஐகோர்ட்டு வக்கீலை தாக்கியதாக விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரம்,

சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருபவர் பேவல் (வயது 54). இவர் தன்னுடைய மனுதாரர்கள் சார்பில் கடந்த 2-ந் தேதி ஒரு வழக்கு சம்பந்தமாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு வழக்கு சம்பந்தமாக துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் எடுத்துரைத்து எதற்காக இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வக்கீல் பேவல் கேட்டுள்ளார்.

அப்போது ஏற்பட்ட வாய்த்தகராறில் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் இன்ஸ்பெக்டர் ஒருவர் ஆகியோர் சேர்ந்து வக்கீல் பேவலை தகாத வார்த்தையால் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வக்கீல் பேவல், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில், தன்னை திட்டி தாக்கிய துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் பெயர் தெரியாத போலீஸ் சீருடையில் இல்லாத இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனை கண்டித்தும், சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விழுப்புரத்தில் வக்கீல்கள் கடந்த 2 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுசம்பந்தமாக டி.ஐ.ஜி., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை நேரில் சந்தித்து வக்கீல்கள் புகார் கொடுத்தனர். அதோடு வக்கீலை தாக்கிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று வக்கீல்கள் அறிவித்தனர்.

இந்நிலையில் வக்கீல் பேவல் கொடுத்த புகாரின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் பெயர் குறிப்பிடாத இன்ஸ்பெக்டர் ஆகிய 3 பேர் மீதும் ‘ஆபாசமாக திட்டுதல், ஆயுதங்கள் இல்லாமல் காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல்’ ஆகிய 3 பிரிவுகளின் கீழ் நேற்று விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல் போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன், தாலுகா போலீசில் ஒரு புகார் செய்தார். அந்த புகாரில் தன்னையும், தன்னுடன் பணியில் இருந்த போலீசாரையும் வக்கீல் பேவல் தகாத வார்த்தையால் திட்டி, மிரட்டி அரசு பணியை செய்ய விடாமல் தடுத்ததாக கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் வக்கீல் பேவல் மீது ‘ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல்’ ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story