அரசு பள்ளிகளில் குறைவான மாணவர்கள்: தனியார் கல்வி நிறுவனங்களை நெறிப்படுத்த வேண்டும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்
குறைவான மாணவர்கள் உள்ள அரசு பள்ளிகள் மூடப்படும் நிலையில் தனியார் கல்வி நிறுவனங்களை நெறிப்படுத்தவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி,
புதுவை முதல்–அமைச்சர், கல்வித்துறை அமைச்சர், கல்வித்துறை செயலாளர் ஆகியோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:–
புதுச்சேரியில் மொத்தம் 422 அரசு பள்ளிகள் உள்ளன. 1991–ல் நவீன தாராளமயக் கொள்கை அமலாக்கப்பட்ட பின்னர் கல்வி வணிகமயமானது. அனைவருக்கும் தரமான கல்வி என்பதற்கு மாறாக பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே கல்வி என்ற நிலை உருவாக்கப்பட்டு விட்டது.
மத்திய பா.ஜ.க. ஆட்சியில் கல்வியில் வகுப்புவாத கருத்தாக்கங்களை உருவாக்குவது, வணிகமயத்தை தீவிரப்படுத்துவது என்பதோடு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமே மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி வாய்ப்புகள் கிடைக்கும் என்கிற முறையில் கல்வி கட்டமைப்புகள் உருவாக்கப்படுகிறது.
ஆகவே, மாநில அரசு, பொறுப்புள்ள சமூகத்தை கட்டமைத்திட அரசு பள்ளிகளை பாதுகாத்து அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 50–க்கும் குறைவான மாணவர்கள் உள்ள அரசு ஆரம்ப பள்ளிகளை மூடிவிட்டு அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைத்து வருகிறது. புதுச்சேரி பாப்பாஞ்சாவடி, வீரர்வெளி தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளுக்கு அருகில் தனியார் பள்ளிகள் தொடங்க அனுமதி வழங்கக்கூடாது. சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு தனியார் கல்வி நிறுவனங்களை நெறிப்படுத்த வேண்டும்.
புதுச்சேரியில் எந்த துறைகளிலும் காலமுறைப்படி பணியிட மாறுதல் செய்யமுடியாத நிலை உள்ளது. இதனால் பிராந்திய அடிப்படையிலான இடஒதுக்கீடு, பணி நியமனம் என்ற தற்காலிக நிலைக்கு அரசு தள்ளப்படுகிறது. இது ஒட்டுமொத்த மாநிலத்தின் வளர்ச்சியை பாதிக்கிறது. எனவே அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல் பணியிட மாறுதலை அனைத்து துறைகளிலும் செயல்படுத்திட வேண்டும்.
மாநில அரசின் நேரடி பொறுப்பில் இயங்கி வந்த மதிய உணவுத்திட்டம் மத அடிப்படையில் செயல்படும் இஸ்கான் கீழ் உள்ள அக்ஷய பாத்திரா அறக்கட்டளைக்கு ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்களின் ஊட்டச்சத்து, பாரம்பரிய உணவு முறை கேள்விக்குள்ளாக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த அறக்கட்டளையின் கீழ் வழங்கப்படும் மதிய உணவில் பூண்டு, வெங்காயம் இடம் பெறுவதில்லை. முட்டை வழங்கப்படுவதில்லை. இதனால் மாணவர்கள் பலர் மதிய உணவை உண்பதில்லை. இது தற்போது கர்நாடகாவில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது.
எனவே அக்ஷய பாத்திரா அறக்கட்டளையுடன் புதுவை அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். அரசே நேரிடையாக மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கவேண்டும்
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.