இலவச பஸ் பாசை முறைகேடாக பயன்படுத்துவதாக புகார்


இலவச பஸ் பாசை முறைகேடாக பயன்படுத்துவதாக புகார்
x
தினத்தந்தி 6 Jan 2019 10:15 PM GMT (Updated: 6 Jan 2019 8:48 PM GMT)

மானாமதுரையில் இலவச பஸ்பாசை முறைகேடாக பயன்படுத்துவதாக புகார் கூறப்படுகிறது.

மானாமதுரை,

தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூ£ மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் இலவச பஸ் பாசை முறைகேடாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றுவர மாணவ, மாணவிகளுக்கு பஸ் பாஸ் வழங்கப்பட்டுஉள்ளது. பஸ் பாஸ் கிடைக்காத மாணவர்கள் சீருடையுடன் அடையாள அட்டை இருந்தால் போது அரசு பஸ்சில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பல கல்லூரிகளில் காலமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. காலை 8 மணி முதல் 1 மணி வரையிலும் மதியம் 1.30 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் ஒருசில இடங்களில் பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு உயரதிகாரிகள் பள்ளி வேலை நேரங்களில் மட்டும் இலவசமாக மாணவ, மாணவிகளை பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் மற்ற நேரங்களில் பயண கட்டணம் வசூலிக்க வேண்டும் என வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர்.

இதனால் நடத்துனர்கள் பலரும் பள்ளி நேரம் இல்லாத பட்சத்தில் அரசு பஸ்சில் பயணம் செய்ய டிக்கெட் எடுக்க வலியுறுத்துகின்றனர். இதனால் மாணவ, மாணவிகளிடம் இலவசமாக பயணம் செய்ய அனுமதிப்பதில்லை. பல நேரங்களில் அரசு பஸ்களில் ஊழியர்களுக்கும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் தகராறு ஏற்படுகிறது. மானாமதுரையில் இருந்து சிவகங்கை செல்லும் மாணவ, மாணவிகள் பலரும் இதில் பாதிப்படைந்துள்ளனர்.

கல்லூரி மாணவ, மாணவிகள் கூறுகையில், சிவகங்கை அரசு கலை கல்லூரியில் கால முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மதிய நேரத்தில் பயணம் செய்ய வேண்டிஉள்ளது. ஆனால் நடத்துனர்கள் டிக்கெட் எடுக்க வலியுறுத்துகின்றனர். கிராமப்புற மாணவ, மாணவிகள் பலரும் அரசின் சலுகை இருப்பதாலேயே உயர்கல்வி படிக்க வருகின்றனர். திடீரென டிக்கெட் எடுக்க சொல்வதால் தடுமாற வேண்டியுள்ளது என்றனர்.

போக்குவரத்து கழக ஊழியர்கள் கூறுகையில், காலை 9 மணி வரைதான் பள்ளிக்குள் நுழைய வேண்டிய நேரம், ஆனால் மாணவ, மாணவிகள் பலரும் காலை 11 மணி, 12 மணிக்கு பஸ்சில் ஏறுகின்றனர். இதனால் டிக்கெட் கட்டணம் வசூலிக்க வேண்டியுள்ளது. பள்ளி வேலை நேரம் தவிர்த்து நாள் ஒன்றுக்கு இரண்டு முதல் மூன்று முறை பயணம் செய்கின்றனர். பள்ளி நேரம் இல்லாத சமயத்தில் அரசு பஸ்சில் மாணவ, மாணவிகளிடம் பயணகட்டணம் வசூலிக்காவிட்டால் அதிகாரிகள் தண்டனை வழங்குகின்றனர். மாணவர்களிடம் டிக்கெட் கட்டணம் கேட்டால் தகராறு செய்கின்றனர் என்றனர்.


Next Story