பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானைகள் தயாரிப்பு பணிகள் மும்முரம்
பழனி அருகே, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானைகள் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பானைகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால் தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
பழனி,
உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விவசாயிகள், விளைநிலங்களின் அருகில் மண் பானையில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படையல் வைப்பார்கள். அதே போல் வீடுகளின் முன்பும் பொதுமக்கள் பானைகளில் பொங்கல் வைத்து குடும்பத்தினருடன் பண்டிகையை கொண்டாடுவார்கள்.
நகர்ப்புறங்களில் பாத்திரங்களில் பொங்கல் வைத்து பண்டிகையை கொண்டாடினாலும், கிராமப்புறங்களில் பழமை மாறாமல் இன்று வரை மண் பானைகளிலேயே பொங்கல் வைக்கப்படுகிறது. எனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைவரும் புதிதாக மண் பானைகளை வாங்கி வைத்துக்கொள்வார்கள்.
இந்த மண் பானைகள் பழனியை அடுத்த புதுஆயக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலேயே அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது. அதன்படி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுஆயக்குடி பகுதியில் பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. சிறிய அளவிலான பானைகள் முதல் பெரிய அளவிலான பானைகள் வரை இப்பகுதியில் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.
அளவை பொறுத்து ஒரு பானை ரூ.30 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. பானை தயாரிக்கும் முறை குறித்து புதுஆயக்குடியை சேர்ந்த பானை தயாரிக் கும் தொழிலாளியான ஆறுமுகத்திடம் கேட்ட போது, பானைகள் தயாரிப்பதற்கான மண்ணை முதலில் கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.
அதையடுத்து அந்த மண்ணை குவித்து வைத்து அதில் தண்ணீரை கலந்து கால்களால் மிதித்து பானை தயாரிக்கும் பதத்துக்கு கொண்டுவர வேண்டும். பின்னர் பானை தயாரிப்புக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சக்கரத்தில் அந்த மண் கலவையை வைத்து, சக்கரத்தை சுழற்றிவிட்டு பொங்கல் பானை தயாரிக்கப்படும்.
பானைகள் தயாரிப்பு செலவை கணக்கிடும் போது, தற்போது கிடைக்கும் விலை கட்டுப்படியாகவில்லை. எனவே பானை தயாரிப்புக்காக வாங்கப்படும் மண்ணுக்கு அரசு மானியம் அளித்தால் எங்களை போன்ற தொழிலாளர் களுக்கு உதவியாக இருக்கும் என்றார்.
Related Tags :
Next Story