4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை 3 நாட்கள் மட்டுமே விசாரித்து தீர்ப்பு வழங்கிய சிக்பள்ளாப்பூர் கோர்ட்டு
4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சிக்பள்ளாப்பூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.இந்த வழக்கை 3 நாட்கள் மட்டுமே விசாரித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
கோலார் தங்கவயல்,
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபித்தனூர் தாலுகா மஞ்சேனஹள்ளி போலீஸ் எல்லைக்குட்பட்ட முகலிகே தின்னே கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாஸ் (வயது 40). கூலி தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு (2018) நவம்பர் மாதம் 4-ந்தேதி அந்தப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அதேப்பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவள் விளையாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது சீனிவாஸ், அந்த சிறுமியிடம் சென்று சாக்லெட் வாங்கி தருவதாக கூறி அவளை மறைவான பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் இது குறித்து வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் சிறுமியை சீனிவாஸ் மிரட்டியுள்ளார். இதனால் அந்த சிறுமி இதுபற்றி வெளியே யாரிடமும் கூறவில்லை.
கைது
இந்த நிலையில் சிறிது நாட்களில் சிறுமி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டாள். அவளை, சிறுமியின் பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவள் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது சிறுமி, தன்னை சீனிவாஸ் பலாத்காரம் செய்ததை பெற்றோரிடம் கூறினாள்.
இதனை கேட்டு அவர்கள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கடந்த 8-11-2018 அன்று மஞ்சேனஹள்ளி போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ரெட்டி உத்தரவின்பேரில் துணை ேபாலீஸ் சூப்பிரண்டு பிரபு சங்கர் தலைமையிலான தனிப்படை போலீசார் சீனிவாசை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் மீது சிக்பள்ளாப்பூர் ேகார்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
20 ஆண்டு சிறை
இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி கடந்த 19-12-2018 அன்று கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதையடுத்து சிக்பள்ளாப்பூர் கோர்ட்டு நீதிபதி சுதீர் அனுமந்தப்பா கோரெட்டி கடந்த 4, 5 மற்றும் 7-ந்தேதி ஆகிய 3 நாட்களில் 17 சாட்சிகளிடம் விசாரணை நடத்தினார். அப்போது, சீனிவாஸ் மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபணம் ஆனது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நீதிபதி சுதீர் அனுமந்தப்பா கோரெட்டி தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றம்சாட்டப்பட்ட சீனிவாசுக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்து 2 மாதங்களில் நீதிபதி சுதீர் அனுமந்தப்பா கோரெட்டி 3 நாட்கள் மட்டுமே விசாரணை நடத்தி குற்றவாளிக்கு தீர்ப்பு வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story