சென்னையில் ‘லிப்ட்’ கொடுப்பதுபோல் நடித்து 200 முதியவர்களிடம் நகை-பணம் பறித்தவர் கைது


சென்னையில் ‘லிப்ட்’ கொடுப்பதுபோல் நடித்து 200 முதியவர்களிடம் நகை-பணம் பறித்தவர் கைது
x
தினத்தந்தி 11 Jan 2019 10:15 PM GMT (Updated: 11 Jan 2019 6:24 PM GMT)

சென்னையில் ‘லிப்ட்’ கொடுப்பதுபோல் நடித்து 200 முதியவர்களிடம் நகை, பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.

அடையாறு,

சென்னை மயிலாப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக தனியாக நடந்து செல்லும் முதியவர்களிடம், மொபட்டில் வரும் மர்மநபர் ‘லிப்ட்’ கொடுப்பதாக கூறி அவர்களை ஏற்றிச்சென்று, அவர்களிடம் இருக்கும் பைகளில் உள்ள பணம் மற்றும் அவர்கள் அணிந்து இருக்கும் மோதிரம் நன்றாக இருப்பதாகவும், அதேபோல் தான் வாங்கவேண்டும் என பார்த்து விட்டு தருவதாக அவற்றை வாங்கி தப்பிச்செல்லும் சம்பவங்கள் குறித்து அதிகளவில் போலீசாருக்கு புகார்கள் வந்தன.

அதன்பேரில் விசாரணை நடத்திய மயிலாப்பூர் போலீசார், அந்த சம்பவம் நடந்த இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மொபட்டில் வந்து முதியவர்களை ஏமாற்றியது ஒரே நபர்தான் என்பதை அடையாளம் கண்டனர்.

இதையடுத்து மயிலாப்பூர் உதவி கமிஷனர் உக்கிரபாண்டியன் உத்தரவின்பேரில் மயிலாப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் அகஸ்டின் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து அந்த மர்மநபரை ரகசியமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மயிலாப்பூரில் உள்ள ஒரு மதுக்கடையில் நின்ற அந்த நபரை தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அவரிடம் இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் விசாரணை நடத்தினார்.

அதில் அவர், கோடம்பாக்கத்தை சேர்ந்த சிவா என்ற சிவகுமார்(வயது 38) என்பதும், கடந்த மாதம் மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையில் சங்கரநாராயணன்(70) என்ற முதியவரை ‘லிப்ட்’ கொடுப்பதாக கூறி ஏமாற்றி அழைத்துச்சென்று, அவரிடம் இருந்த கைப்பையை மொபட்டின் முன்புறம் வைப்பதுபோல் நடித்து அதில் இருந்த பர்சை திருடி, அதில் அவர் வைத்து இருந்த ஏ.டி.ஏம். கார்டை பயன்படுத்தி பணத்தை திருடினார்.

இதேபோல் மயிலாப்பூரில் 4 முதியவர்களையும், கோடம்பாக்கம், அம்பத்தூர், ஆவடி, தாம்பரம், பள்ளிக்கரணை, பெருங்களத்தூர் என சென்னையில் பல்வேறு பகுதிகளில் சுமார் 200 முதியவர்களை இதேபோல் ஏமாற்றி அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறித்ததும், அவ்வாறு ஏமாற்றி பறித்த தங்க நகைகளை வடபழனியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து உள்ளதும் தெரிந்தது.

இதையடுத்து பிடிபட்ட சிவா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் பணம், 3 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

குற்றவாளியை விரைந்து பிடித்த இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் அகஸ்டின் மற்றும் போலீசாரை மயிலாப்பூர் துணை கமிஷனர் மயில்வாகனன் பாராட்டினார்.

Next Story