புதுவை பல்கலைக்கழக மேலாண்மை ஆய்வியல் துறையில் பகுதிநேர எம்.பி.ஏ. பாடப்பிரிவு தொடக்கம்
புதுவை பல்கலைக்கழக மேலாண்மை ஆய்வியல் துறையில் பகுதிநேர எம்.பி.ஏ. பாடப்பிரிவு தொடங்கப்பட உள்ளது.
புதுச்சேரி,
புதுவை பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரி மகேஷ் விடுத்துள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
புதுவை பல்கலைக்கழக மேலாண்மை ஆய்வியல் துறை சார்பில் நிதி, மனிதவளம், சந்தைப்படுத்துதல் மற்றும் இயக்கம் ஒழுங்கு மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் எம்.பி.ஏ. பாடப்பிரிவுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகின்றன. இந்த நிலையில் எம்.பி.ஏ. முழுநேர பாடப்பிரிவில் வணிக பகுப்பாய்வு என்ற பிரிவு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. மாலை 6 மணிமுதல் 9 மணிவரை வகுப்புகள் நடத்தப்படும்.
அதோடு பகுதிநேர சுயநிதி கல்வி முறை திட்டத்தின்கீழ் 3 ஆண்டுகளுக்கான புதிய எம்.பி.ஏ. பாடப்பிரிவு தொடங்கப்பட உள்ளது. வணிக பகுப்பாய்வு எம்.பி.ஏ. பாடப்பிரிவில் பி.காம், பி.பி.ஏ., பி.எஸ்.சி., பொறியியல் துறைகளில் இளநிலை பாடப்பிரிவில் 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாற்று திறனாளிகள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். விண்ணப்பதாரர்கள் 1:3 என்ற அளவில் 2018 ‘கேட்’ பொதுசேர்க்கைக்கான எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், கலந்துரையாடல் மற்றும் மார்ச் மாதம் 2–வது வாரத்தில் நடைபெற உள்ள நேர்முக தேர்வின் அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
இந்திய குடியுரிமை இல்லாதவர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் மத்திய அரசின், மனிதவள மேம்பாட்டுத்துறை மற்றும் இந்திய கலாசார மேம்பாட்டு துறை மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்திய குடியுரிமை இல்லாதவர்கள் தகுந்த ஆவணங்களோடு துறை தலைவரிடம் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும் பகுதிநேர எம்.பி.ஏ. வகுப்புகளில் சேரலாம். கலந்துரையாடல் மற்றும் நேர்முக தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். பணியாற்றும் நிறுவனங்களில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். இதுதொடர்பான விவரங்கள் மார்ச் மாதம் வெளியிடப்படும்.
இதற்கான நுழைவுத்தேர்வு புதுவையில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.