ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் மை பேனாக்களை பயன்படுத்த தொடங்கிய மாணவ-மாணவிகள்


ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் மை பேனாக்களை பயன்படுத்த தொடங்கிய மாணவ-மாணவிகள்
x
தினத்தந்தி 11 Jan 2019 11:00 PM GMT (Updated: 11 Jan 2019 9:17 PM GMT)

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் மை பேனாக்களை மாணவ-மாணவிகள் பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் இளநிலை, முதுகலை பாடப்பிரிவுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நீலகிரி மட்டுமின்றி, வெளிமாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகளும் ஊட்டியில் தங்கி இருந்து படிக்கிறார்கள். நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் பிளாஸ்டிக்கால் ஆன பந்து முனை பேனாக்களுக்கு பதிலாக மை பேனாக்களை பயன்படுத்த தொடங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதற்காக மை பேனா இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது. நிகழ்ச்சியில் தமிழ்த்துறையை சேர்ந்த இளநிலை, முதுகலை மற்றும் ஆய்வு மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பந்து முனை பேனாக்களை இனிமேல் பயன்படுத்த மாட்டோம். அதனை ஒருமுறை பயன்படுத்தி விட்டு எரிவதால், மண்ணில் மக்காமல் பல ஆண்டுகளாக கிடக்கிறது. இதனால் மண்ணின் தன்மை கெட்டு போவதோடு, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. மை பேனாக்களை தொடர்ந்து பயன்படுத்துவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதையடுத்து தமிழத்துறை மாணவ-மாணவிகள் வகுப்புகள்தோறும் சென்று, சக மாணவ-மாணவிகளிடம் இருந்து பந்து முனை பேனாக்களை சேகரித்தனர். இனிமேல் அதனை பயன்படுத்தக்கூடாது என்றும், மை பேனாவை தொடர்ந்து பயன்படுத்தினால், பந்து முனை பேனாக்கள் நிலத்தில் வீசுவது தவிர்க்கப்படும் என்று எடுத்துக்கூறினர். பின்னர் அவர்கள் சேகரித்த பந்து முனை பேனாக்களுடன் கல்லூரி வளாகத்தில் விழிப்புணர்வு பேரணியாக சென்றனர். அதனை தொடர்ந்து தமிழ்த்துறை மாணவ-மாணவிகள் மட்டுமின்றி, மற்றவர்களும் மை பேனாக்களை முழுமையாக பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

நிகழ்ச்சியில் தமிழ்த்துறை உதவி பேராசிரியர் மணிவண்ணன் ‘நெகிழியில்லா நீலகிரி’ என்ற தலைப்பில் பேசினார். இதில் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எபனேசர், பேராசிரியர்கள் சோபனா, ராமகிருஷ்ணன், கண்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story