3,705 பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் விண்ணப்பிக்க 18-ந்தேதி கடைசி நாள்


3,705 பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் விண்ணப்பிக்க 18-ந்தேதி கடைசி நாள்
x
தினத்தந்தி 12 Jan 2019 10:15 PM GMT (Updated: 12 Jan 2019 6:00 PM GMT)

3705 பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட இருக்கிறது. எனவே இதை பெறுவதற்கு வருகிற 18-ந்தேதிக்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.

கடலூர், 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்டத்தில் 2018-19-ம் ஆண்டில் பல்வேறு இடங்களில் வேலை செய்யும் 3,705 பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. சொந்த நிதியிலோ, வங்கி கடன் மற்றும் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று வாங்கலாம்.

18 வயது முதல் 40 வயது வரை உள்ள பெண்கள், அமைப்பு ரீதியான, அமைப்பு சாரா பிரிவில் பணிபுரியும் பெண்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிவோர், சில்லறை வணிகம் மற்றும் இதர தொழில்களில் பணிபுரியும் பெண்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு திட்டங்கள், சமூக அமைப்பை சேர்ந்த பெண்கள், வங்கி தொடர்பு மகளிர் மற்றும் ஆஷா மகளிர் பணியாளர்கள் ஆகியோர் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர்.

மேலும் விண்ணப்பிக்கும் நபர்களின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும். விண்ணப்பிக்கும்போது ஓட்டுனர் பயிற்சி சான்று பெற்றிருக்க வேண்டும்.

கிராமப்பகுதியில் உள்ளோர், மலைப்பகுதியில் உள்ளோர், ஏழை பெண்களை குடும்ப தலைவராக கொண்ட குடும்பங்களை சார்ந்தவர்கள், ஆதரவற்ற விதவை, பெண், மாற்று திறனாளிகள்(4 சதவீதம்), 35-வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்கள், ஆதிதிராவிடர் பெண்கள்(21 சதவீதம்), பழங்குடியினர் பெண்கள்(ஒரு சதவீதம்) மற்றும் திருநங்கைகளுக்கு முன்னுரி அளிக்கப்படும்.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள நகர்புற மற்றும் ஊரக பகுதிகளை சார்ந்த பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவங்களை அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், பேரூராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை வருகிற 18-ந் தேதி மாலை 5 மணிக்குள் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி, நகராட்சி அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும் இதுபற்றிய கூடுதல் விவரங்களை ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களிலோ அல்லது மகளிர் திட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story