1,580 பயனாளிகளுக்கு ரூ.9½ கோடியில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்


1,580 பயனாளிகளுக்கு ரூ.9½ கோடியில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்
x
தினத்தந்தி 13 Jan 2019 4:00 AM IST (Updated: 13 Jan 2019 2:40 AM IST)
t-max-icont-min-icon

1,580 பயனாளிகளுக்கு ரூ.9½ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.

கரூர்,

ஏழை பெண்களின் திருமணத்திற்கு உதவும் வகையில், சமூக நலத் துறையின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின்கீழ் தலா 8 கிராம் தங்கம் மற்றும் நிதிஉதவி வழங்கும் நிகழ்ச்சி கரூரில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, 1,580 பயனாளிகளுக்கு ரூ.9 கோடியே 57 லட்சம் மதிப்பில் தலா 8 கிராம் தங்கம் மற்றும் நிதிஉதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தினை பொருளாதார ரீதியாகவும், கல்வியிலும் முன்னேற்றம் அடைய செய்யும் பொருட்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னேடியாக தமிழகம் திகழ்கிறது. அதிலும் குறிப்பாக பெண் சிசுக்கொலைகளை தடுக்கும் விதமாக தொட்டில்குழந்தை திட்டம், கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு நிதிஉதவி திட்டம், ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவியுடன் கூடிய தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் பெண்களின் நலனில் அக்கறை கொண்டே செயல்படுத்தப்படுகிறது.

ஏழை பெண்களின் திருமணத்திற்காக தாலிக்கு தங்கமும், பள்ளிப்படிப்பு படித்தவர்களுக்கு தலா ரூ,25,000-ம், பட்டபடிப்பு படித்தவர்களுக்கு தலா ரூ.50,000-ம் என கல்வித்தகுதிக்கு ஏற்றாற்போல திருமணத்திற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. அதேபோல இந்த நிகழ்ச்சியில் பட்டப்படிப்பு முடித்த 825 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000 நிதியுதவியும், பள்ளிப்படிப்பு முடித்த 755 பயனாளிகளுக்கு தலா ரூ,25,000 நிதியுதவியும், அனைவருக்கும் தலா 8 கிராம் தங்கம் என மொத்தம் 1,580 பயனாளிகளுக்கு ரூ.9 கோடியே 57 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற தமிழக அரசின் திட்டங்களை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா, மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, வட்டாட்சியர் ஈஸ்வரன், மாவட்ட சமூக நல அதிகாரி ரவிபாலா மற்றும் மாவட்ட அவைத்தலைவர் காளியப்பன், ஒன்றிய செயலாளர்கள் என்ஜினீயர் கமலக்கண்ணன், மார்க்கண்டேயன், டி.வி.விநாயகம், நகர ஜெ.பேரவை செயலாளர் செல்வராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெயராஜ், கரூர் நகர செயலாளர் நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story