பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு கிடப்பதால் சிவகாசியில் களையிழந்த பொங்கல் பண்டிகை வெறிச்சோடிய கடை வீதிகள்


பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு கிடப்பதால் சிவகாசியில் களையிழந்த பொங்கல் பண்டிகை வெறிச்சோடிய கடை வீதிகள்
x
தினத்தந்தி 13 Jan 2019 4:30 AM IST (Updated: 13 Jan 2019 4:19 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள் கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டு இருப்பதால் பொங்கல் பண்டிகை களையிழந்து காணப்படுகிறது. கடை வீதிகளில் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

சிவகாசி,

சிவகாசி பகுதியில் 1,070 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த நம்பவர் மாதம் 13–ந்தேதி முதல் மூடப்பட்டு கிடக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி பேரியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருள் இல்லாமல் பட்டாசுகள் தயாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் பேரியம் நைட்ரேட் வேதிப்பொருள் இல்லாமல் பட்டாசுகளை தயாரிக்க முடியாத நிலை இருப்பதால் ஆலைகள் கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இதனால் பட்டாசு தொழிற்சாலைகளில் பணியாற்றி வந்த 4 லட்சம் தொழிலாளர்களும் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.

பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு இருப்பதால் தொழிலாளர்கள் பலர் வாழ்வாதாரம் தேடி கேரளாவுக்கும், திருப்பூருக்கும் வேலைக்கு சென்றுள்ளனர். மேலும் சிலர் சிவகாசியில் உள்ள அச்சகங்கள் மற்றும் கட்டிட பணிக்கு சென்று வருகின்றனர். வெளியூர் சென்றவர்கள் தற்போது அங்கு பணியாற்றி வரும் நிலையில், சிவகாசியில் உள்ள அச்சகங்களில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் காலண்டர் தயாரிக்கும் பணி முடிந்த பின்னர் கடந்த 15 நாட்களாக வேலை இல்லாமல் வீட்டில் முடங்கி கிடக்கிறார்கள். சிலர் கட்டிட பணிக்கு குறைந்த கூலிக்கு சென்று வருகின்றனர்.

வழக்கமாக சிவகாசி பட்டாசு ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் சிவகாசி பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் உள்ளூர் தொழில் அதிபர்கள் தங்களது ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 3 முறை போனஸ் வழங்குவது உண்டு. குறிப்பாக தீபாவளி பண்டிகையின் போது சில நிறுவனங்கள் 2 மாதம் முதல் 3 மாத சம்பளத்தை போனசாக வழங்கி வந்தனர். இதே போல் பங்குனி மாதத்தில் கோவில் திருவிழாவின் போதும் போனஸ் வழங்கப்படும். அடுத்து பொங்கல் பண்டிகையின்போதும் போனஸ் வழங்கப்படும். இதனால் தொழிலாளர் குறைந்த மாத வருமானம் என்றாலும் இந்த போனஸ் தொகையை வைத்து சமாளித்து வந்தனர். ஆனால் தற்போது பட்டாசு ஆலைகள் மூடி இருப்பதால் அதனை சார்ந்த எந்த தொழிலும் சரிவர நடக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்து விட்டனர். இதனாலும் பலர் வேலை இழந்து தவித்து வருகிறார்கள்.

வழக்கமாக தீபாவளி, பொங்கல், பங்குனி மாத திருவிழா காலங்களில் இங்குள்ள தொழிலாளர்கள் மத்தியில் பணப்புழக்கம் அதிகம் இருக்கும். பண்டிகை காலங்களில் கடை வீதிகளில் உள்ள எல்லா கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகள் தொடர்ச்சியாக மூடப்பட்டு இருப்பதால் சிவகாசி பகுதி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதும் இதே நிலை நீடிக்கிறது. கடந்த காலங்களில் இருந்தது போல் இல்லாமல் கடைவீதிகள் வெறிச்சோடி களையிழந்து காணப்படுகின்றன.


Next Story