பெரிய தாதம்பாளையம் ஏரிக்கு அமராவதி ஆற்று நீரை கொண்டு வராவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு


பெரிய தாதம்பாளையம் ஏரிக்கு அமராவதி ஆற்று நீரை கொண்டு வராவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 14 Jan 2019 10:15 PM GMT (Updated: 14 Jan 2019 8:11 PM GMT)

பெரியதாதம்பாளையம் ஏரிக்கு அமராவதி ஆற்று உபரி நீரை கொண்டு வராவிட்டால் வரும் தேர்தலை புறக்கணிப்போம் என விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

க.பரமத்தி,

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம், பவுத்திரம் ஊராட்சியில் உள்ள பெரியதாதம்பாளையத்தில், தமிழக வனத்துறை கட்டுப்பாட்டில் சுமார் 300 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஏரி அமைக்கப்பட்டது. ஆண்டிசெட்டிபாளையத்திலிருந்து, தாதம்பாளையம் வரை சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் இயற்கையாகவே நீர்வழித்தடம் உள்ளது. இது உப்பாறு கரை என்று சொல்லப்படுகிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு மழை பெய்தால் இந்த ஏரியில் தண்ணீர் சேகரிக்கப்பட்டு, சுமார் 5ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது. மேலும் அருகே உள்ள 26 ஊராட்சிகளில் நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.

அந்த காலத்தில் மழை அதிகம் பெய்ததால் இந்த நீர்வழித்தடத்தில் அரசு சார்பில் 26 குளங்கள் அமைக்கப்பட்டன. அதன்பிறகு அதிக மழை பெய்யாததால் 26 குளங்களும் நிரம்பவில்லை, தாதம்பாளையம் ஏரிக்கும் தண்ணீர் வரவில்லை. இதனால் குளங்களும், ஏரிகளும் பராமரிப்பு இன்றி பயன்பாடின்றி போய் விட்டன. இதனால் குளங்களை தூர்வாரக்கோரி அந்தப்பகுதி பொதுமக்கள் தமிழக அரசுக்கும், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர், மாவட்ட கலெக்டருக்கு மனுகொடுத்தும் பயனளிக்கவில்லை. இதையடுத்து நேற்று ஆரியூரில் பெரியதாதம்பாளையம் ஏரிக்கு அமராவதி ஆற்று உபரி நீரை கொண்டு வருவது சம்பந்தமான விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு விவசாய சங்க பிரதிநிதி சுந்தரம் தலைமை தாங்கினார். முருகேசன், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கலந்து கொண்டு பேசியதாவது:-

விவசாயிகளுக்கு தண்ணீர் கொடுக்கவேண்டியது அரசின் கடமை. பெரியதாதம்பாளையம் ஏரிக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் கொண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. சின்னதாராபுரம் அருகே அணைப்புதூர் அணைக்கட்டிலிருந்து அணையை உயர்த்தியோ அல்லது பம்பிங் மூலமாகவோ 10 கிலோ மீட்டர் தூரமுள்ள ஆண்டிசெட்டிபாளையத்திற்கு தண்ணீர் கொண்டு வந்தாலே, பெரியதாதம்பாளையம் ஏரிக்கு அமராவதி ஆற்றில் இருந்து உபரிநீர் வந்து விடும். இதற்கு சுமார் ரூ.35 கோடி செலவாகும். எனவே அரசு இந்த பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும். இல்லையென்றால் தேர்தலை புறக்கணிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு ஆதரவு அளித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விவசாயி ஜெயச்சந்திரன் வாசித்தார். முன்னதாக விவசாயி திருநாவுக்கரசு வரவேற்றார். முடிவில் அரிஸ்டோ சேகர் நன்றி கூறினார்.

Next Story