பனவடலிசத்திரம் அருகே விபத்தில் தொழிலாளி சாவு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது பரிதாபம்


பனவடலிசத்திரம் அருகே விபத்தில் தொழிலாளி சாவு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது பரிதாபம்
x
தினத்தந்தி 14 Jan 2019 10:03 PM GMT (Updated: 14 Jan 2019 10:03 PM GMT)

பனவடலிசத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி இறந்தார். நண்பர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பியபோது இந்த பரிதாப சம்பவத்தில் சிக்கி கொண்டார்.

பனவடலிசத்திரம்,

நெல்லை மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள கீழநலந்துலா கீழத்தெருவை சேர்ந்தவர் தங்கமாரியப்பன். இவரது மகன் மாரியப்பன்(வயது21). கூலித் தொழிலாளி. நேற்று முன்தினம் காலையில் இவர் வெள்ளாளங்கோட்டையில் உள்ள தனது நண்பர் வீட்டில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அங்கு நிகழ்ச்சி முடிந்த நிலையில் அன்றைய தினம் இரவில் மீண்டும் மோட்டார் சைக்கிளில் தனது ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். செட்டிக்குறிச்சி அருகே வந்தபோது சாலை வளைவில் திரும்பியபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மாரியப்பன் தலையில் பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அந்த ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை முடிந்த பின்பு, மேல் சிகிச்சைக்காக அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து அய்யாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாஹித் லிங்காத் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

நண்பர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பியபோது மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story