துறையூர் அருகே குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
துறையூர் அருகே குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.
துறையூர்,
திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த சிங்களாந்தபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது, காளிப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதுகுறித்து துறையூர் ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த காளிப்பட்டி கிராம மக்கள் ஒன்று திரண்டு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கக்கோரி நேற்று முன்தினம் காலை திருச்சி–துறையூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உங்கள் கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.