மோட்டார் சைக்கிள்கள் மோதல்; என்ஜினீயர் உள்பட 2 பேர் சாவு


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; என்ஜினீயர் உள்பட 2 பேர் சாவு
x
தினத்தந்தி 17 Jan 2019 4:00 AM IST (Updated: 17 Jan 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையின் போது மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் என்ஜினீயர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள புதுவேட்டகுடி கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ரமேஷ்(வயது 35). என்ஜினீயரான இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி வெண்ணிலா, மகன் அஸ்வின்கார்த்திக்(ஒரு மாத குழந்தை) ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் ரமேசின் அக்காள் வீடான கடலூர் மாவட்டம், தொழுதூருக்கு பொங்கல் பொருட்களை வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வேப்பூர் அருகே கருங்குளம் என்ற இடத்தில் சென்று கொண் டிருந்தபோது, எதிரே வந்த புதுவேட்டகுடி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஓட்டல் தொழிலாளியான தங்கரசு மகன் செல்லபாண்டி(23) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், ரமேஷ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் ரமேசுக்கும், செல்லபாண்டிக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வெண்ணிலா மற்றும் அவரது மகன் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி செல்லும் வழியில் செல்லபாண்டி உயிரிழந்தார்.

திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரமேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் விசாரணையில், செல்லபாண்டி மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஒரே கிராமத்தில் 2 பேர் விபத்தில் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story