நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் குமரகுரு எம்.எல்.ஏ. பேட்டி
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்று குமரகுரு எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
திருக்கோவிலூர்,
விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர்.குமரகுரு எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
இந்திய துணை கண்டத்திலேயே சட்டம் ஒழுங்கு நிறைந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. சமீபத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன், ரூ.1000 வழங்கிய முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.
மக்களின் முழு ஆதரவுடன் ஆட்சி நடத்திவரும் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக செயல்பட்டு வருகிறார். கள்ளக்குறிச்சியை புதிய மாவட்டமாக அறிவித்ததை இப்பகுதி மக்கள் மிகவும் வரவேற்றுள்ளனர்.
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 3 தொகுதியிலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றிபெறும். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளையும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிதான் கைப்பற்றும். தி.மு.க. அமைத்துள்ள கூட்டணியை மக்கள் ஏற்கவில்லை. கிராமங்கள் தோறும் ஊராட்சி சபை கூட்டம் என்ற நாடகத்தை நடத்திய மு.க.ஸ்டாலினை கண்டு மக்கள் எள்ளி நகையாடுகின்றனர். இது தேர்தலுக்கு தேர்தல் ஸ்டாலின் நடத்தும் நாடகம் என்பதை அனைவரும் அறிந்துள்ளனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது ஒவ்வொரு கிராமமாக சென்றார். அதுவும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. தேர்தலுக்கு, தேர்தல் மக்களை சந்திக்கும் ஸ்டாலினை மக்கள் முதல்–அமைச்சராக ஏற்க தயாரில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் வழிகாட்டுதல்படி, கலெக்டர் சுப்பிரமணியன் மேற்பார்வையில் அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். உலக அளவில் எதிர்கட்சிகளின் தூண்டுதலால் அதிகபோராட்டங்களை எதிர்கொண்டு வெற்றி பெற்று வரும் இந்த அரசு, தமிழக மக்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் இனியும் தொடர் வெற்றிபெறும்.
இவ்வாறு குமரகுரு எம்.எல்.ஏ. கூறினார்.