விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி ஆர்ப்பாட்டம் நாளை மறுநாள் நடக்கிறது


விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி ஆர்ப்பாட்டம் நாளை மறுநாள் நடக்கிறது
x
தினத்தந்தி 19 Jan 2019 11:15 PM GMT (Updated: 19 Jan 2019 3:59 PM GMT)

விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி நாளை மறுநாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்று பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

விருத்தாசலம்,

விருத்தாசலத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது அந்த பகுதியை சேர்ந்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலைவில் இது தொடர்பாக அந்த பகுதி மக்களின் கலந்தாய்வு கூட்டம் விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடைபெற்றது. இதற்கு மணிமுக்தாறு நீர்ப்பாசன சங்க தலைவர் வக்கீல் தனவேல் தலைமை தாங்கினார்.

தனியார் கரும்பு உற்பத்தியாளர் சங்க மாநில செயலாளர் கார்மாங்குடி வெங்கடேசன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுந்தரராஜன், வக்கீல் அருள்குமார், வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தை பிரித்து விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில் ஆகிய பகுதிகளை ஒருங்கிணைத்து விருத்தாசலத்தை புதிய மாவட்டமாக அமைக்க தமிழக அரசை வலியுறுத்துவது.

இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் நடத்துவது, மேலும் விருத்தாச்சலம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளை கள்ளக்குறிச்சி அல்லது வேறு மாவட்டங்களில் இணைக்கக் கூடாது, விருத்தாச்சலம் மாவட்டம் அமைய அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளிடம் ஆதரவு திரட்டுவது, விருத்தாசலம் பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கிராமசபை கூட்டம் நடத்தி விருத்தாசலத்தை தனி மாவட்டம் அறிவிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றுவது.

விருத்தாசலத்தை புதிய மாவட்டமாக அமைக்க தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாளை மறுநாள்(செவ்வாய்கிழமை) விருத்தாசலம் பாலக்கரையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்காவிட்டால் வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி கதிர்காமன், மக்கள் விடுதலை ராமர், விவசாய சங்கம் கந்தசாமி, மணிகண்டன், செந்தில்குமார், ராஜ்மோகன், மதியழகன், அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story