அ.தி.மு.க.வில் ஒவ்வொரு தொண்டனுக்கும் முதல்–அமைச்சர் ஆகும் தகுதி உண்டு எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் குமரகுரு எம்.எல்.ஏ. பேச்சு
அ.தி.மு.க.வில் ஒவ்வொரு தொண்டனுக்கும் முதல்–அமைச்சர் ஆகும் தகுதி உண்டு என்று திருக்கோவிலூர் அருகே நடந்த எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் குமரகுரு எம்.எல்.ஏ. பேசினார்.
திருக்கோவிலூர்,
ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள திருப்பாலபந்தல் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் ஏ.பி.பழனி தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் கதிர்.தண்டபாணி, ரிஷிவந்தியம் ஒன்றிய செயலாளர்கள் அருணகிரி, சங்கராபுரம் அரசு, மணலூர்பேட்டை நகர செயலாளர் தங்கவேல், முன்னாள் மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன் ஆகியோர் தொடக்க உரையாற்றினார்கள். மாவட்ட இலக்கிய அணி செயலாளர் துரைராஜ், பொதுக்குழு உறுப்பினர் சி.ஆர்.பார்த்தசாரதி, மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் பாசறை செயலாளர் சந்தோஷ், மாவட்ட மகளிரணி செயலாளர் அமுதா, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் சேகர், ஊராட்சி செயலாளர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக்கோவிலூர் நகர செயலாளர் கே.சுப்பு வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் ஆர்.குமரகுரு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் நல்லவராக வாழ்ந்து காட்டியவர். அதுதான் அவருடைய வெற்றிக்கு காரணம். அவர் தனது நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தததால் தான் ஜெயலலிதாவை அரசியல் வாரிசாக அறிமுகம் செய்தார். அதன் பலனாக எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அ.தி.மு.க.வை மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கட்டுக்கோப்பாக வளர்த்து தமிழகத்தை ஆள செய்தார். ஜெயலலிதா இறந்த பின்பு அ.தி.மு.க.வை தினகரன் போன்ற துரோகிகள் உடைத்து ஆட்சிக்கு வரமுயற்சிக்கின்றனர். ஆனால் அ.திமு.க.வில் ஒவ்வொரு தொண்டனுக்கும் முதல்–அமைச்சர் ஆகும் தகுதி உண்டு.
இதுதான் ஜெயலலிதாவின் கனவு ஆகும். அதனால் தான் கிளை செயலாளர், ஊராட்சி செயலாளர், ஒன்றிய செயலாளர், மாவட்ட செயலாளர் என வந்த எடப்பாடி பழனிசாமி தற்போது தமிழக முதல்–அமைச்சராக உள்ளார். இந்த நிலை அ.தி.மு.க.வில் மட்டும் தான் முடியும். தி.மு.க அப்படி அல்ல. அது ஒரு லிமிட்டெட் கம்பெனி, முதலாளி, முதலாளி மகன், பேரன் இப்படி குடும்ப வாரிசுதான் பதவிக்கு வரமுடியும். ஜெயலலிதாவின் எண்ணங்களையும், கனவுகளையும் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி ஆட்சி செய்து வருகிறார். பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கிய முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக மக்கள் கொடுத்த ஆதரவை கண்டு மு.க.ஸ்டாலின் மிரண்டு போய் விட்டார். அவருக்கு அரசியல் எதிர்காலம் கிடையாது.
இவ்வாறு ஆர்.குமரகுரு எம்.எல்.ஏ. பேசினார்.
கூட்டத்தில் கள்ளக்குறிச்சி எம்.பி. டாக்டர் காமராஜ், தலைமை கழக பேச்சாளர் புலிசை சந்திரசேகரன், எடையூர் பழனிசாமி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தங்கராஜ், கூட்டுறவு சங்க தலைவர்கள் ராமலிங்க ரெட்டியார், கலையழகன், துறிஞ்சிப்பட்டு முருகன், செந்தாமரை தண்டபாணி, பரசுராமன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஏசுபாதம், ஊராட்சி செயலாளர் அருணகிரி, துணைத் தலைவர்கள் உமாசங்கர், பாலகிருஷ்ணன், ஞானமுர்த்தி, மேமாளுர் கிளை செயலாளர் காமராஜ், தனகனந்தல் தங்கவேல், செங்கனாங்கொல்லை கிருஷ்ணன், சிவசங்கரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் வெற்றிச்செல்வன், அசோக்குமார், லலிதாவங்கடேசன், நாதன்காடுவெட்டி சுபாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நரியந்தல் கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோவன் நன்றி கூறினார்.