நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும் அன்வர்ராஜா எம்.பி. பேச்சு
திருவாடானையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும் என்று அன்வர்ராஜா எம்.பி. பேசினார்.
தொண்டி,
திருவாடானை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருவாடானையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் அசோக்குமார், பொதுக்குழு உறுப்பினர் நந்திவர்மன், தொண்டி நகர் செயலாளர் பவுசுல்ஹக், ஆர்.எஸ்.மங்கலம் முன்னாள் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் ஒன்றிய பொருளாளர் ஜெயராமன் வரவேற்றார். கூட்டத்தில் அன்வர்ராஜா எம்.பி. கலந்துகொண்டு பேசியதாவது:– அ.தி.மு.க. எனும் பேரியக்கத்தை முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். உருவாக்கினார். இந்த இயக்கத்தில் இணைந்த தொண்டர்களுக்கு அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றுத்தந்தார். எம்.ஜி.ஆர். நிலைத்த புகழுக்கு சொந்தக்காரர்.
ஜெயலலிதா காட்டிய வழியில் ஆட்சி நடத்தி வரும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி,துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழ்நாட்டு மக்களுக்காக நல்லாட்சி நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும். அ.தி.மு.க.வை சிலர் பா.ஜ.க.வின் அடிமை என்று பேசுகிறார்கள். மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நல்ல திட்டங்களை தரும்போது ஆதரிப்பதும், தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராக செயல்பட்டால் அதனை எதிர்த்து குரல் கொடுப்பதும் தான் அ.தி.மு.க.வின் கொள்கை. அதன் அடிப்படையிலேயே செயல்பட்டு வருகிறோம். 15 ஆண்டுகள் தி.மு.க. மத்திய அரசில் இடம்பெற்று இருந்தது. இதனால் தமிழ்நாட்டிற்கு எந்த பயனும் இல்லை.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தமிழ்நாட்டில் அதிக இடங்களை கைப்பற்றுவதற்கு கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும். அப்போது தான் எல்லோரும் பங்கேற்கும் தேசிய அரசாங்கம் மத்தியில் அமையும். அதன் மூலம் தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களை அ.தி.மு.க. பெற்றுத்தரும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் ஆணிமுத்து, தலைமை கழக பேச்சாளர் சேகர், முன்னாள் யூனியன் துணை தலைவர் ராமகிருஷ்ணன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் சுப்பு, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் கடம்பாகுடி கணேசன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாண்டி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் கந்தவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.