9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அலுவலர்கள்-ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்


9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அலுவலர்கள்-ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்
x
தினத்தந்தி 23 Jan 2019 4:15 AM IST (Updated: 23 Jan 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அலுவலர்கள்-ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள், தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அலுவலர்கள்-ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்்.

அதன்படி நேற்று அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. இதனால் திருவாரூர் தாசில்தார் அலுவலகம் உள்பட அனைத்து அரசு அலுவலகங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதன் காரணமாக அரசு பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. வேலை நிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட கலெக்டர்் அலுவலகம் முன்பு அரசு அலுவலர்கள்-ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் ரவி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஈவேரா, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் துரைராஜ், அரசுப்பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி,் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் சிவகுரு ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் ஏராளமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல நீடாமங்கலத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி நீடாமங்கலம் பழைய தாசில்தார் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர் சங்க மாநிலபொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன், கிராம ஊராட்சி செயலாளர் சங்க மாவட்ட செயலாளர் குரு.செல்வமணி, ஒருங்கிணைப்பாளர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க வட்ட நிர்வாகி இளமாறன், அரசு பணியாளர் சங்க நிர்வாகி சந்திரசேகரன், ஆசிரியர்கள் மாரிமுத்து, ராஜேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் நீடாமங்கலம் பகுதியில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், அங்கன்வாடிகள் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் அலுவலர்கள் இன்றி வெறிச்சோடி கிடந்தன. இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.

வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் வேல்முருகன், அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் புஷ்பநாதன், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கழக வட்டார ஒருங்கிணைப்பாளர் கணேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, ஊராட்சி செயலாளர்கள், சாலை பணியாளர்கள், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரிய-ஆசிரியைகள் கலந்து பலர் கொண்டனர்.

குடவாசல் தாசில்தார் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ வட்ட பொறுப்பாளர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். வட்ட பொறுப்பாளர்கள் உமாநாத், ரவிச்சந்திரன், மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி கலந்து கொண்டு பேசினார். இதில் வட்ட தலைவர் சுந்தரலிங்கம், செயலாளர் தெட்சிணாமூர்த்தி, மகளிர் அணி தலைவி கண்ணகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி நன்னிலம் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், பட்டதாரி ஆசிரியர் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்பரசன், ஆசிரியர் மன்ற ஒருங்கிணைபாளர் அருள், அரசு ஊழியர் சங்க ஒருங்கிணைப்பாளர் கருணாமூர்த்தி, சத்துணவு ஊழியர் சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

,மன்னார்குடி உதவி கலெக்டர் அலுவலகம் அருகே ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் சின்னையன், ஆசிரியர் கூட்டணி வட்ட செயலாளர் முருகையன் ஆகியோர் தலைமை தாங்கினர்.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடை நிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கிணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story