சேலத்தில் போராட்டம் நீடிப்பு: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலைமறியல்; 2,850 பேர் கைது


சேலத்தில் போராட்டம் நீடிப்பு: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலைமறியல்; 2,850 பேர் கைது
x
தினத்தந்தி 24 Jan 2019 11:00 PM GMT (Updated: 24 Jan 2019 9:32 PM GMT)

சேலத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. இதையொட்டி கலெக்டர் அலுவலகம் அருகே சாலைமறியலில் ஈடுபட்ட 2,850 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் இந்த வேலைநிறுத்த போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. இதற்கிடையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே மறியல் போராட்டம் நடத்த ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஆயிரக் கணக்கான ஆசிரிய, ஆசிரியைகள் சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் அருகே திரண்டனர்.

இதையொட்டி மாநகர போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதுதவிர அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கைது செய்து ஏற்றி செல்வதற்காக போலீஸ் வாகனம், அரசு பஸ்கள், வேன்கள் ஆகியவை அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரி தலைமையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நாட்டாண்மை கழக கட்டிடம் அருகே இருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டவாறு கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ரவுண்டானா முன்பு வந்தனர். பின்னர் அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சிலர் சாலையில் படுத்துக்கொண்டு மறியல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக போக்குவரத்தில் சில மாற்றம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்து வாகனத்தில் ஏற்றி கொண்டு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டது.

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1500 பெண்கள் உள்பட 2,850 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களை சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள நேரு கலையரங்கம் மற்றும் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்த போராட்டத்தால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் போலீசார் விரைவாக ஈடுபட்டனர்.

முன்னதாக போராட்டத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூறும்போது, ‘நியாயமான கோரிக்கைகளுக்காக நாங்கள் போராடி வருகிறோம். ஆகையால் எங்களுடைய போராட்டம் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்ட குழுவின் அறிவுரையின் படி தொடர்ந்து நடைபெறும்’ என்றனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தினால் 3-வது நாளாக நேற்றும் பணிகள் பாதிக்கப்பட்டன. பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு செல்லாததால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. பொதுமக்களும் சான்றிதழ்கள் பெற முடியாமல் தொடர்ந்து தவித்து வருகின்றனர்.

இதேபோல் ஆசிரியர்களும் பணிக்கு செல்லாததால் மாணவ, மாணவிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு விரைவில் செய்முறை தேர்வு நடைபெற இருப்பதால் அவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த போராட்டம் குறித்து கலெக்டர் ரோகிணி கூறும்போது, ‘பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று ஏற்கனவே தலைமை செயலகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. பள்ளிகளுக்கு செல்லாத ஆசிரியர்களை வருகை பதிவேடுகள் மூலம் கணக்கெடுத்து வருகிறோம். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

Next Story