கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு வழங்காததால் ரெயில் தண்டவாளத்தில் படுத்து விவசாயிகள் போராட்டம்


கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு வழங்காததால் ரெயில் தண்டவாளத்தில் படுத்து விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 29 Jan 2019 4:15 AM IST (Updated: 29 Jan 2019 2:53 AM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு வழங்காததால் ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடமதுரை, 

திண்டுக்கல்-விழுப்புரம் இடையே 281 கி.மீ. தூரத்துக்கு இரட்டை ரெயில்பாதை அமைக்கும் பணி 1,200 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கியது. இதையடுத்து 2-வது ரெயில் பாதை அமைப்பதற்காக தாமரைப்பாடி-தங்கம்மாபட்டி இடையே ஏற்கனவே இருந்த ரெயில் பாதை அருகில் உள்ள நிலங்களை ரெயில்வே நிர்வாகம் கையகப்படுத்தியது.

இதற்கான இழப்பீடு தொகை இதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது 2-வது ரெயில்பாதை பணிகள் முடிந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக வடமதுரை பகுதியில் பழைய தண்டவாளங்கள் அகற்றப்பட்டு, அதிக எடையுள்ள புதிய தண்டவாளங்கள் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. நேற்று செங்குளத்துப்பட்டி அருகே பணிகள் நடந்தது. அப்போது அங்கு வந்த விவசாயிகள் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து பணிகளை செய்யவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு வழங்கக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன், வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பேசி இழப்பீடு பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர். மாறாக ரெயில் தண்டவாளத்தில் போராட்டம் நடத்தக்கூடாது என்று அறிவுறுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story