திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின் கீழ் உளுந்து கொள்முதல் கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யும் நிகழ்ச்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின் கீழ் உளுந்து கொள்முதல் செய்யும் நிகழ்ச்சியை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து அவர், எந்தந்த பகுதிகளில் இருந்து உளுந்து இங்கு வருகிறது, அதன் ரகம், கொள்முதல் செய்யப்படும் போது மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் செல்வசேகர் மற்றும் திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் செயலாளர் மாரியப்பனிடம் கேட்டறிந்தார்.
பின்னர் கலெக்டர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவண்ணாமலை விற்பனை குழுவின் கட்டுபாட்டின் கீழ் உள்ள திருவண்ணாமலை, வாணாபுரம், கீழ்பென்னாத்தூர், வந்தவாசி, புதுப்பாளையம், நாயுடுமங்கலம் மற்றும் சேத்துப்பட்டு ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின் கீழ் உளுந்து கொள்முதல் செய்யப்படுகிறது. மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையான ஒரு கிலோவிற்கு ரூ.56 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் முன்னதாகவே தங்களது பெயரை தங்கள் பகுதிக்கு அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பதிவு செய்வதற்கு சிட்டா அடங்கல், ஆதார் அடையாள அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், சம்பந்தப்பட்ட பகுதியை சேர்ந்த உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் துணை வேளாண்மை அலுவலர், வேளாண்மை அலுவலர் ஆகியோரிடம் பெறப்பட்ட உற்பத்தி சான்று போன்றவற்றை எடுத்து வர வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு என்றைக்கு தங்களது உளுந்து பயிரை எடுத்து வர வேண்டும் என்று தகவல் தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும். அதன் பின்னர் விவசாயிகள் சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு தங்களது உளுந்து பயிரை எடுத்து வரவேண்டும்.
விவசாயிகளுக்கான விற்பனை தொகை விவசாயிகளது வங்கி கணக்கில் 2 அல்லது 3 நாட்களுக்குள் வரவு வைக்கப்படும். இந்த திட்டமானது ஏப்ரல் 30-ந் தேதி வரை மட்டுமே செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் கலெக்டர் கந்தசாமி, விவசாயிகளிடம் பேசினார். அப்போது விவசாயிகள், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உளுந்து குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்து 200 வரை சென்றது. ஆனால் தற்போது ரூ.5 ஆயிரத்து 600 தான் அரசு விலை நிர்ணயித்து உள்ளது. ஆனால் வெளியில் இதைவிட குறைவாகத்தான் வாங்குகின்றனர். அதற்கு இது பரவாயில்லை. இருப்பினும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உளுந்து கொள்முதல் விலையை அதிகரிக்க வழிவகை செய்ய வேண்டும்.
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களை நீங்கள் பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் திருவண்ணாமலை உழவர் சந்தையையும் பார்வையிட்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன் பெறும் வகையில் கூடுதல் வசதி செய்துதர வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
அதற்கு உளுந்து கொள்முதல் செய்வது மாநில அரசு, ஆனால் அதற்கு விலை நிர்ணயம் செய்வது மத்திய அரசு தான். எனவே இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்புகிறேன் என்று கலெக்டர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story