கரூரில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நிறைவு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


கரூரில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நிறைவு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 1 Feb 2019 10:30 PM GMT (Updated: 1 Feb 2019 8:39 PM GMT)

கரூரில் நடந்த முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நிறைவு பெற்றதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

கரூர்,

கரூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. முதல் கட்டமாக பூப்பந்து, நீச்சல், பளுதூக்குதல், ஜிம்னாஸ்டிக்ஸ், கூடைப்பந்து, கைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. நேற்று போட்டிகள், கரூர் தாந்தோன்றிமலையிலுள்ள மாவட்ட விளையாட்டரங்கில் தொடர்ந்து நடந்தன. இதில் 100, 200, 400, 800, 3,000, 5,000 மீட்டர் வரையிலான ஓட்டப்பந்தயம் நடந்தது. தொடர்ந்து நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், தடை தாண்டும் ஓட்டம் உள்ளிட்ட தடகள போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடந்தன.

போட்டிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடற்கல்வி ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டு ஒரே நேரத்தில் போட்டிகளை விளையாட்டரங்க வளாகத்தில் நடத்தி வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் முதல்- அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் நிறை வடைந்ததையொட்டி மாலையில் பரிசளிப்பு விழா நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் கீதா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட அளவிலான முதல்- அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு முறையே ரூ.1,000, ரூ.750, ரூ.500 என பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மேலும் மாவட்ட அளவிலான போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்-வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அழைத்து செல்லப்பட இருக்கின்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி சாந்தி செய்திருந்தார்.

Next Story