சூலூர் அருகே விபத்தில் இறந்ததாக கருதப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டார்


சூலூர் அருகே விபத்தில் இறந்ததாக கருதப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டார்
x
தினத்தந்தி 1 Feb 2019 10:29 PM GMT (Updated: 1 Feb 2019 10:29 PM GMT)

சூலூர் அருகே விபத்தில் இறந்ததாக கருதப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டது புலன் விசாரணையில் அம்பலமானது.

சூலூர்,

கோவை மாவட்டம் சூலூர் பள்ளபாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன். தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி சரண்யா (வயது32). இவர்களது சொந்த ஊர் விருதுநகர் ஆகும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ந் தேதி காலை 10 மணி அளவில் சரண்யா தனது கணவன் மோகன் வேலை செய்யும் இடத்திற்கு சென்று வீட்டுச்சாவியை வாங்கிக்கொண்டு தனது மொபட்டில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார்.

அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் சரண்யா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. மோதிய வேகத்தில் சரண்யா அங்குள்ள கம்பி வேலியில் தூக்கி வீசப்பட்டார். இதில் அவரது கழுத்து மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சரண்யா, சிகிச்சை பலன் அளிக்காமல் மறுநாள் காலை பரிதாபமாக உயிர் இழந்தார். கோவை அரசு ஆஸ்பத்திரியில் சரண்யாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில், சரண்யாவின் சாவு சந்தேகத்திற்கிடமாக இருப்பதாக பிரேதபரிசோதனை அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து சரண்யாவின் கணவர் மோகன் சூலூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் மனு அனுப்பினார். இதையடுத்து சூலூர் போலீசார் தனிப்படை அமைத்து இந்த வழக்கை புலன் விசாரணை செய்தனர். இதில், சரண்யா கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. மொபட்டில் சென்ற சரண்யாவை காரில் வந்து மோதி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை தாக்கி உள்ளனர். இதன் காரணமாக சரண்யா இறந்ததும் தெரியவந்துள்ளது. இந்த தொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மற்றொருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு சம்மதிக்காததால் சரண்யா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் தொடர்புடையவர்கள் இன்னும் ஒரு சில நாட்களில் கைது செய்யப்படுவார்கள் என்றனர்.

Next Story