விவசாயத்தை பாதுகாக்க சாதி, மதங்களை கடந்து விவசாயிகள் ஒன்றிணைய வேண்டும் ஜக்கி வாசுதேவ் பேட்டி


விவசாயத்தை பாதுகாக்க சாதி, மதங்களை கடந்து விவசாயிகள் ஒன்றிணைய வேண்டும் ஜக்கி வாசுதேவ் பேட்டி
x
தினத்தந்தி 2 Feb 2019 11:00 PM GMT (Updated: 2 Feb 2019 9:46 PM GMT)

விவசாயத்தை பாதுகாக்க சாதி, மதங்களை கடந்து விவசாயிகள் ஒன்றிணைய வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கூறினார்.

சமயபுரம்,

ஈஷா விவசாய இயக்கம் சார்பில் இயற்கை விவசாய பயிற்சி வகுப்பு திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் நேற்று தொடங்கியது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவிற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மற்றும் வேளாண் வல்லுனர் சுபாஷ் பாலேக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் செல்லமுத்து, எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்களின் (ராமபுரம் - திருச்சி) தலைவர் சிவகுமார், டாடா டிரஸ்ட்ஸ் மேலாண் அறங்காவலர் வெங்கட்ராமன், தலைமை செயல் அதிகாரி ஹரீஷ் கிருஷ்ணசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மறைந்த நெல் ஜெயராமனுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் பாரம்பரிய நெல் விதைகளை முன்னோடி இயற்கை விவசாயிகளுக்கு ஜக்கி வாசுதேவ் வழங்கினார். இந்த பயிற்சி வகுப்பு 9 நாட்கள் நடைபெறுகிறது. விவசாயிகளுக்கு, வேளாண் வல்லுனர் சுபாஷ் பாலேக்கர் பயிற்சி அளிக்கிறார். நாட்டு மாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காங்கேயம், ஆலம்பாடி உள்ளிட்ட 15 வகையான நாட்டு மாடுகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பாக ஜக்கி வாசுதேவ், நிருபர்களிடம் கூறியதாவது:-

ரசாயனம் இல்லாத இயற்கை உணவை உண்ண வேண்டும் என்ற ஆர்வம் உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் உருவாகி உள்ளது. ஆனால், தேவையான செயல்களை நாம் இன்னும் செய்யவில்லை. மிசோரம் மாநிலத்தை போல், தமிழகத்தையும் இயற்கை விவசாய மாநிலமாக மாற்ற வேண்டும். அதற்கு அரசுகள் சட்டங்கள் கொண்டு வந்தால் போதாது. விவசாயிகள் மத்தியிலும் ஆர்வம் உருவாக வேண்டும். அந்த நோக்கத்தில் தான் இந்த இயற்கை விவசாய பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளோம். இதில் 3 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.

ஈஷா யோகா மையத்தில் ஒரு வேளாண் மையத்தை நிறுவும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் விவசாயிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். அந்த நிறுவனத்தில் விவசாயி அல்லாதவர்கள் தலைமை பொறுப்புக்கு வர முடியாது.

நம் நாட்டில் விவசாயம் என்பதை ஒரு லாபகரமான தொழிலாக மாற்றாவிட்டால் அது நாட்டிற்கு ஆபத்தாக மாறிவிடும். தற்போது விவசாயம் செய்து வரும் விவசாயிகளில், வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே தங்களுடைய வாரிசுகளை விவசாயத்தில் ஈடுபடுத்த விருப்பத்துடன் இருக்கின்றனர். இந்த நிலை நீடித்தால், அடுத்த 10, 20 ஆண்டுகளில் நம் நாட்டில் விவசாயம் செய்வதற்கு ஆளே இருக்க மாட்டார்கள். விவசாயம் என்பது ஒரு சாதாரண விஷயம். எனவே, விவசாயத்தை பாதுகாக்க சாதி, மதங்களை கடந்து அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story