தஞ்சை பெரியகோவிலில் காலணிகளை பாதுகாக்க அடாவடி கட்டண வசூல் பக்தர்கள்-சுற்றுலா பயணிகள் அதிருப்தி


தஞ்சை பெரியகோவிலில் காலணிகளை பாதுகாக்க அடாவடி கட்டண வசூல் பக்தர்கள்-சுற்றுலா பயணிகள் அதிருப்தி
x
தினத்தந்தி 4 Feb 2019 10:45 PM GMT (Updated: 4 Feb 2019 7:33 PM GMT)

தஞ்சை பெரியகோவிலில் காலணிகளை பாதுகாக்க அடாவடி கட்டண வசூல் செய்யப்படுவதால் பக்தர்கள்-சுற்றுலா பயணிகள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்,

மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரியகோவில் கட்டிட கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறது. உலக பாரம்பரிய சின்னமான இந்த கோவில் மத்திய தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் பராமரிப்பு பணிகளை இந்து சமய அறநிலையத்துறையும், அரண்மனை தேவஸ்தானமும் மேற்கொண்டு வருகின்றன.

இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள், வெளிநாட்டினர் வந்து பெருவுடையாரையும், பெரியநாயகி அம்மனையும் தரிசனம் செய்வதுடன், கோவிலின் கட்டிடக்கலையை பார்த்து வியந்து சென்று வருகிறார்கள்.

இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில்களில் பக்தர்களின் காலணிகளுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவைத்தொடர்ந்து தஞ்சை பெரிய கோவிலில் சில நாட்கள் பக்தர்களின் காலணிகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாமல் இருந்தது. ஆனால் அதன் பின்னர் காலணிகளுக்கு கட்டணம் வசூலிக்க தனியாரிடம் ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

கேரளாந்தகன் கோபுரத்திற்கு வலதுபுறத்தில் காலணிகளை பாதுகாக்கும் இடம் உள்ளது. இங்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் காலணிகளை பாதுகாக்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஒரு ஜோடி காலணியை பாதுகாக்க ரூ.2 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இப்போது எந்தவித முன்அறிவிப்பும் இன்றி ரூ.3 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டு அடாவடியாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த கட்டண உயர்வால் கோவிலுக்கு வரும் பக்தர்கள்-சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அத்துடன் எந்தவித முன்அறிவிப்பும் இல்லாமல் இப்படி கட்டணத்தை உயர்த்தி இருக்கிறீர்களே என கேள்வி எழுப்பினால் அவர்களிடம் அங்குள்ள பணியாளர்கள் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர்.

மனநிம்மதியுடன் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களை கோபப்பட வைத்து அவர்கள் நிம்மதியின்றி சாமி தரிசனம் செய்யும் வகையில் அடாவடி செயல்களில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காலணிகளை பாதுகாக்க வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு உரிய ரசீதும் கொடுக்கப்படுவதில்லை.

இது குறித்து கேள்வி எழுப்பினால் புதிதாக ஒருவர் ஒப்பந்தம் எடுத்துள்ளதால் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இந்த காலணி காப்பகத்தின் மூலம் வசூல் ஆகும் தொகை அரசுக்கு முறையாக செல்கிறதா என்று தெரியவில்லை. எனவே காலணிகளுக்கு முறையாக எவ்வளவு கட்டணம், ஒப்பந்தம் எடுத்தவர் முகவரி, எத்தனை ஆண்டுகள் அவரது ஒப்பந்தகாலம் என்பது குறித்து தகவல் பலகை வைக்க வேண்டும். அப்போது தான் முறைகேடு நடைபெறுவதை தடுக்க முடியும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்.

பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் கார், வேன், பஸ்கள் நிறுத்துவதற்காக வாகன நிறுத்தும் இடம் உள்ளது. இங்கே வாகனத்தை நிறுத்தி விட்டு கோவிலுக்கு வருபவர்கள் காலணிகளை அணிந்து கொண்டு கேரளாந்தகன் கோபுரத்தை கடந்து சென்றால் அவர்களை அழைத்து காலணி பாதுகாக்கும் இடம் இருக்கும் இடத்தை தெரிவிப்பதற்காக ஆங்காங்கே 3 தொழிலாளர்கள் இருப்பார்கள்.

காலணிகளுக்கு வசூலிக்கப்படும் கட்டண உயர்வுக்கு பயந்து வெளியூர்களில் இருந்து வருபவர்கள் சிலர், ராஜராஜன் கோபுரத்தின் அருகே புல்தரையில் காலணிகளை கழற்றி போட்டுவிட்டு கோவிலுக்குள் சென்று விடுகின்றனர். இப்படி செல்பவர்களின் காலணிகளை அடாவடியாக சாக்குகளில் அள்ளிப்போட்டு, அதை கோவிலுக்கு வெளியே உள்ள அகழியில், ஊழியர்கள் கொட்டி விடுகின்றனர்.

கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு பக்தர்கள் வெளியே வரும்போது, தங்களது காலணிகளை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைகின்றனர். அங்கும், இங்குமாக காலணியை தேடி அவர்கள் அலைவதை பார்க்கும் போது மிகவும் பரிதாபமாக இருக்கிறது. மன நிம்மதிக்காக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மனவேதனையை தரும் வகையில் ஊழியர்கள் நடந்து கொள்வது அநாகரீக செயலாக உள்ளது.

அதுமட்டுமின்றி கோவில் நுழைவு பகுதியில் காவலர் உதவி மையத்தின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, அருகிலேயே காலணிகளை கழற்றிவிட்டு சென்றாலும் அதையும் அள்ளி சென்று அகழியில் போட்டு விடுகின்றனர். இதுபோன்ற நடவடிக்கையை கைவிட்டு பக்தர்களிடம் அன்பாக அறிவுரை வழங்க பணியாளர்கள் முன்வர வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும். இனிமேலாவது தஞ்சை பெரியகோவிலில் பக்தர்கள் நிம்மதியாக தரிசனம் செய்து திரும்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

Next Story