புனேயில் ஊருக்குள் புகுந்ததால் பரபரப்பு : சிறுத்தைப்புலி தாக்கி 8 பேர் காயம்


புனேயில் ஊருக்குள் புகுந்ததால் பரபரப்பு : சிறுத்தைப்புலி தாக்கி 8 பேர் காயம்
x
தினத்தந்தி 4 Feb 2019 9:13 PM GMT (Updated: 4 Feb 2019 9:13 PM GMT)

புனேயில் ஊருக்குள் புகுந்து சிறுத்தைப்புலி தாக்கியதில் 8 பேர் காயம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பும், பீதியும் நிலவியது.

புனே, 

புனே முந்த்வா கேசவ் நகர் பகுதியில் அதிக அளவில் குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரையில் அந்த பகுதியில் சிறுத்தைப்புலி ஒன்று நடமாடியதை சிலர் கண்டனர். அந்த சிறுத்தைப்புலி புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு அடுக்குமாடி கட்டிடத்திற்குள் நுழைந்தது.

இதை அறிந்து அப்பகுதி மக்கள் கூட்டமாக கூடி வேடிக்கை பார்த்தனர். சிலர் சிறுத்தைப்புலியை பிடிக்க முயன்றனர். அப்போது அந்த சிறுத்தைப்புலி அங்கு கூடியிருந்தவர்கள் மீது பாய்ந்து கடித்து குதறியது. இதில் ஒரு மூதாட்டி உள்பட 4 பேர் காயம் அடைந்தனர். பின்னர் அந்த சிறுத்தைப்புலி அந்த கட்டிடத்திற்குள் உள்ள ஒரு அறைக்குள் சென்று மறைந்து கொண்டது.

இதற்கிடையே தகவல் அறிந்து வனத்துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அந்த சிறுத்தைப்புலியை பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது அந்த சிறுத்தைப்புலி அவர்கள் மீதும் பாய்ந்து கடித்தது. இதில் வனத்துறை ஊழியர், ஒரு போலீஸ்காரர் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.

பின்னர் தப்பி ஓடிய அந்த சிறுத்தைப்புலி கட்டிடத்தின் ஒரு பள்ளத்தில் விழுந்துவிட்டது. தீயணைப்பு படையினர் அந்த சிறுத்தைப்புலியை 2½ மணி நேர போராட்டத்துக்கு பின்னர் வலையை விரித்து பிடித்தனர். இதையடுத்து சிறுத்தைப்புலி காத்ரஜில் உள்ள மீட்பு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

சிறுத்தைப்புலி தாக்குதலில் காயம் அடைந்தவர்களுக்கு அங்குள்ள ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

புனேயில் ஊருக்குள் சிறுத்தைப்புலி புகுந்த சம்பவம் பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Next Story