நாய், பூனைகளால் தங்கள் பகுதியை மட்டுமே ஆள முடியும்: ‘நரேந்திர மோடி காட்டுக்கே ராஜா’ - தேவேந்திர பட்னாவிஸ்


நாய், பூனைகளால் தங்கள் பகுதியை மட்டுமே ஆள முடியும்: ‘நரேந்திர மோடி காட்டுக்கே ராஜா’ - தேவேந்திர பட்னாவிஸ்
x
தினத்தந்தி 4 Feb 2019 10:48 PM GMT (Updated: 4 Feb 2019 10:48 PM GMT)

நாய், பூனைகளால் தங்கள் பகுதியை மட்டுமே ஆள முடியும் என்றும், நரேந்திர மோடி காட்டுக்கே ராஜா என்றும் மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

மும்பை, 

மும்பை பா.ஜனதா கட்சியின் இளைஞர் அணியினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. ஆனால் அந்த கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் கூட அறிவிக்கப்படவில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் பிரதமராக இருப்பார்கள்.

இவர்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாட்டிற்கு நன்மை ஏற்படுத்த எந்த திட்டமும் அவர்களிடம் இல்லை.

தி.மு.க. கட்சி தலைவர் ஸ்டாலின், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோர் தங்கள் மாநிலத்தில் மட்டும் தான் தலைவர்களாக உள்ளனர்.

ஆனால் பிரதமர் மோடி தான் செல்லும் இடங்களில் எல்லாம் லட்சக்கணக்கான மக்களை கவர்ந்து இழுக்கிறார். நாய்களும், பூனைகளும் தங்கள் சொந்த பகுதியை ஆளும். பிரதமர் மோடி காட்டுக்கே ராஜா.

ஒரு உதவாத அரசு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டால் நாட்டின் வளர்ச்சி தேக்கம் கண்டுவிடும். தற்போதைய வளர்ச்சி அப்படியே தொடருமானால் 2035-ம் ஆண்டில் நம் நாடு உலகிலேயே முதன்மை நிலையை அடையும். இந்த முன்னேற்றம் தடைபட்டுவிடக்கூடாது.

வலுவிழந்த, உதவாத அரசு தேர்ந்தெடுக்கப்பட்டால், பாகிஸ்தான் நம் நாட்டை தாக்கக்கூடும். அப்போது இந்த ஆட்சியாளர்களில் சிலர் பாகிஸ்தானுக்கு சாதகமாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

இவ்வாறு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசினார்.

சமீபத்தில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா, எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி குறித்து பேசியபோது, “ஒருவேளை இந்த மெகா கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் திங்கட்கிழமை மாயாவதி, செவ்வாய்க்கிழமை அகிலே‌ஷ் யாதவ், புதன்கிழமை மம்தா பானர்ஜி, வியாழக்கிழமை சரத்பவார், வெள்ளிக்கிழமை தேவேகவுடா, சனிக்கிழமை மு.க.ஸ்டாலின் என தினமும் ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார்கள். ஞாயிற்றுக்கிழமையில் அந்த பதவிக்கு விடுமுறை அளித்து விடுவார்கள்” என கிண்டலடித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story