மாமல்லபுரம், மதுராந்தகத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி


மாமல்லபுரம், மதுராந்தகத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 6 Feb 2019 4:30 AM IST (Updated: 6 Feb 2019 12:38 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரம், மதுராந்தகம், கூடுவாஞ்சேரியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் சாலை பாதுகாப்பு விதியை அமல்படுத்தும் வகையில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போலீசார், பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணியை மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜ் தொடங்கிவைத்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணியில் விபத்தில் இருந்து தற்காக்கும் வகையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை சுற்றுலா வந்த பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் மாணவர்கள் வழங்கினர். மேலும் ஹெல்மெட் அணிந்து போலீசாரும் மாமல்லபுரம் நகரம் முழுவதும் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியும் நடத்தினர்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் திருநாவுக்கரசு, கன்னியப்பன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பேரில் மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தலைமையில் மேல்மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் மேல்மருவத்தூர் பஸ் நிறுத்தத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி பேரணி நடந்தது. பேரணியை இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் தொடங்கிவைத்தார். இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயபாஸ்கர், தேவதாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

இதேபோல் மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் டில்லிபாபு உள்ளிட்ட போலீசார் மதுராந்தகம் பஸ் நிறுத்தத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

இதேபோல் செய்யூர் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் செய்யூர் பஸ் நிறுத்தத்தில் சாலை பாதுகாப்பு குறித்தும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும் துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

இதே போல் சூனாம்பேடு இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் சூனாம்பேடு பஸ் நிறுத்தத்தில் சாலைபாதுகாப்பு குறித்தும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும் துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.

இதே போல் படாளம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் படாளம் பஸ் நிறுத்தத்தில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

கூடுவாஞ்சேரி சிக்னல் அருகே நடந்த விழிப்புணர்வு பேரணிக்கு கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர்கள் திலீப்குமார், கோபால், சிங்காரவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வளவன் கலந்துகொண்டனர்.

பின்னர் 20-க்கும் மேற்பட்ட போலீசார் இருசக்கர வாகனங்களில் ஹெல்மட் அணிந்தபடி சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையான வண்டலூர், ஓட்டேரி, கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, தைலாவரம், பொத்தேரி பகுதிகளில் பேரணியாக வந்து வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Next Story