வாழப்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை திருட்டு


வாழப்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 8 Feb 2019 3:00 AM IST (Updated: 8 Feb 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

வாழப்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வாழப்பாடி, 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரம் வைத்திப்படையாச்சி தெருவை சேர்ந்தவர் மணி, விவசாயி. இவருடைய மனைவி அமிர்தவள்ளி (வயது 65). இவர்களது மகன் கிருபாகரன், சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மூத்த மகள் ராஜேஸ்வரி சேலம் அரசு இல்லத்தில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். மற்றொரு மகள் வசந்தி சேலத்தில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.

மேலும் மணி இறந்து விட்டதால், வாழப்பாடியில் உள்ள வீட்டில் அமிர்தவள்ளி தனியாக வசித்து வருகிறார். கடந்த 4-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு, மருத்துவ பரிசோதனைக்காக சேலத்துக்கு சென்றார். பின்னர் அவர் தனது மூத்த மகள் ராஜேஸ்வரி வீட்டில் தங்கி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை அமிர்தவள்ளியின் வீட்டு கதவு திறந்து இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் அமிர்தவள்ளிக்கும், வாழப்பாடி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அமிர்தவள்ளி சேலத்தில் இருந்து வாழப்பாடிக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோவில் வைத்திருந்த 17 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் வெள்ளிப்பொருட்களை காணவில்லை.

வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. மேலும் வாழப்பாடி போலீஸ் துணை சூப்பிரண்டு சூர்யமூர்த்தி, இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து சேலத்தில் இருந்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீசார் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

வாழப்பாடி பேரூராட்சிக்குட்பட்ட அக்ரஹாரம் பகுதியில் வீட்டில் கொள்ளை போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story