சின்னதம்பி யானையை பிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்


சின்னதம்பி யானையை பிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 7 Feb 2019 11:15 PM GMT (Updated: 2019-02-08T03:08:55+05:30)

உடுமலை அருகே முகாமிட்டுள்ள சின்னதம்பி யானையை பிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு மற்றும் நெற்பயிர்களை சின்னதம்பி யானை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மடத்துக்குளம்,

கோவை மாவட்டம் டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்ட சின்னதம்பி யானை அங்கிருந்து வந்து பொள்ளாச்சி பகுதியில் சுற்றித்திரிந்தது. அதன் பின்னர் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் வந்து முகாமிட்டது.

இந்த பகுதியில் சின்னதம்பி யானைக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. பசியை தீர்க்க கரும்பு, தாகம் தீர்க்க குடிநீர், தங்குவதற்கு போதிய இடம் ஆகியன உள்ளன. இதனால் பசிக்கும்போது கரும்புகளையும், தாகம் எடுக்கும்போது தண்ணீரை குடித்துக்கொண்டு அங்கேயே தங்கிக்கொண்டு சுக வாழ்க்கை வாழ்வதால் அங்கிருந்து போக மறுக்கிறது.

சின்னதம்பி யானையை அங்கிருந்து அப்புறப்படுத்தி வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடலாம் என்று கலீம் மற்றும் மாரியப்பன் என்ற 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. ஆனால் இந்த கும்கிகளால் சின்னதம்பி யானையை அங்கிருந்து வனப்பகுதிக்குள் விரட்ட முடியவில்லை. மாறாக இந்த 2 கும்கிகளும், சின்னதம்பி யானையுடன் அவ்வப்போது சேர்ந்து கும்மாளமிடுகின்றன.

எனவே சின்னதம்பி யானை முகாமிட்டுள்ள பகுதியில் உள்ள புதர்களை வனத்துறையினர் பொக்லைன் எந்திரம் கொண்டு அகற்றினார்கள். இதனால் சின்னதம்பி அங்கு படுத்து ஓய்வெடுக்காமல் கரும்பு காட்டின் நடுபகுதிக்கு சென்று ஓய்வெடுக்கிறது. இதற்கிடையில் சின்னதம்பியால் தற்போது அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு பாதிப்பும், விளை நிலங்களுக்கு சேதமும் ஏற்பட்டு வருகிறது. கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நுழைவு வாயில் இரும்பு கேட்டை உடைத்து நொறுக்கியுள்ளது. அதன்பின்னர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியை விட்டு வெளியே வந்த சின்ன தம்பி யானை அந்த பகுதியில் நெல் வயல்களுக்குள் புகுந்தது. இதனால் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.

முதலில் பயிர்களை நாசம் செய்யாத சின்னதம்பி யானை தற்போது நெய்பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சின்னதம்பியின் அட்டகாசம் தொடரும் நிலையில், அதை பிடிக்க வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் சின்னதம்பி யானை ஊருக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே சின்னதம்பி யானையை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் பழனி-உடுமலை சாலையில் கிருஷ்ணாபுரம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் மடத்துக்குளம் போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-

சின்னதம்பி யானையால் முதலில் எந்த சேதம் ஏற்படவில்லை. ஆனால் நாளுக்கு நாள் அந்த யானையால் சேதம் அதிகமாகி வருகிறது. முதலில் களங்களில் காய வைக்கப்பட்டு இருந்த மக்காச்சோளத்தை தின்று சுவைத்தது. அதன்பின்னர் நெல் வயல்களுக்குள் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. கடந்த 1-ந் தேதி முதல் சின்னதம்பியை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கு வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை.

ஏதோ வனத்துறையினர் பலர் கூடி ஆலோசனை நடத்துகிறார்கள். ஆனால் அதில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சென்று விடுகிறார்கள். இது தொடர்கதையாகி வருகிறது. எனவே சின்னதம்பியை விரைவில் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதையடுத்து சின்னதம்பியை வனப்பகுதிக்குள் விரட்ட, சூழ்நிலைக்கு தக்கவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர்.

இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். உடுமலை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கரும்பு மற்றும் நெற்பயிர்களை சின்னதம்பி யானை தொடர்ந்து சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதற்கிடையில் சின்னதம்பி யானை மாலை 4 மணி அளவில் கிருஷ்ணாபுரம் அமராவதி புது வாய்க்கால் அருகே உள்ள கரும்பு தோட்டத்திற்குள் புகுந்து கரும்பை சுவைத்துவிட்டு அங்கேயே படுத்து ஓய்வெடுத்தது.

Next Story