காதலியுடன் ஊர்சுற்றி ஆடம்பர செலவு செய்ய திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது 10 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு


காதலியுடன் ஊர்சுற்றி ஆடம்பர செலவு செய்ய திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது 10 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு
x
தினத்தந்தி 8 Feb 2019 9:45 PM GMT (Updated: 8 Feb 2019 6:44 PM GMT)

பெங்களூருவில் காதலியுடன் ஊர்சுற்றி ஆடம்பர செலவு செய்ய வாகன திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் 10 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன.

பெங்களூரு,

பெங்களூரு கோரமங்களா போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த வாலிபரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர் பொம்மனஹள்ளி 7-வது கிராஸ், 6-வது மெயின் ரோட்டை சேர்ந்த கார்த்திக் (வயது 26) என்று தெரிந்தது. மேலும் இவர், வீடுகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வாகன நிறுத்தும் பகுதிகளில் உள்ள மோட்டார் சைக்கிளை திருடி விற்பனை செய்வதை தொழிலாக வைத்திருந்தார். இவ்வாறு மோட்டார் சைக்கிள்களை திருடி வந்ததால் ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டு கார்த்திக் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

ஆனால் சிறையில் இருந்து வெளியே வந்த பின்பும் அவர் மோட்டார் சைக்கிளை திருடுவதை தொடர்ந்துள்ளார். தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால், கார்த்திக்குடன் வாழ பிடிக்காமல், அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார்.

தற்போது கார்த்திக் ஒரு இளம்பெண்ணை காதலித்து வருகிறார். அந்த இளம்பெண்ணுடன் ஊர் சுற்றுவதற்காக விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை கார்த்திக் திருடி, அதில் வலம் வந்துள்ளார். இதுதவிர மோட்டார் சைக்கிள்களை திருடி விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் பணத்தை தனது காதலியுடன் வணிக வளாகம், சினிமா, ஓட்டல்களுக்கு சென்று ஆடம்பரமாக செலவு செய்வதை கார்த்திக் வாடிக்கையாக வைத்திருந்ததும் தெரியவந்தது. கார்த்திக் கொடுத்த தகவலின் பேரில் பல்வேறு இடங்களில் திருடிய 10 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும்.

கார்த்திக்கை கைது செய்திருப்பதன் மூலம் கோரமங்களா, மடிவாளா, எச்.எஸ்.ஆர். லே-அவுட், பண்டே பாளையா உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்த 10 வாகன திருட்டு வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது. கைதான கார்த்திக் மீது கோரமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story