திருட்டு வி.சி.டி. முறையை தமிழக அரசு விரைவில் ஒழிக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
திருட்டு வி.சி.டி. முறையை தமிழக அரசு விரைவில் முற்றிலும் ஒழிக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
கழுகுமலை,
திருட்டு வி.சி.டி. முறையை தமிழக அரசு விரைவில் முற்றிலும் ஒழிக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
நடிகர் கமல்ஹாசனுக்கு பாடம்நடிகர் கமல்ஹாசன் நிலையான புத்தி இல்லாதவர். அவரது விஸ்வரூபம் படம் வெளியிடுவதில் பிரச்சினை ஏற்பட்டவுடன், நாட்டை விட்டே வெளியேறுவதாக கூறினார். அவருக்கு அப்போதைய முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா உதவியதால்தான் அந்த திரைப்படம் வெளியானது. ஆனால் அந்த நன்றியை மறந்து கமல்ஹாசன் பேசுகிறார். தேர்தல் முடிவுக்கு பின்னர் எந்த கட்சி நிலைத்து நிற்கும்?, எந்த கட்சி நாட்டை விட்டு செல்லும்? என்பது குறித்து கமல்ஹாசனுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
கடந்த 1967–ம் ஆண்டில் இருந்து திராவிட கட்சிகள் தமிழகத்தை ஆட்சி செய்து வருகின்றன. இதில் அ.தி.மு.க. 32 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்துக்கு நல்லாட்சியை வழங்கி வருகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க.வின் ஆட்சி என்றும் நிலைத்து நிற்கும்.
திருட்டு வி.சி.டி. ஒழிப்புதிருட்டு வி.சி.டி. முறையை ஒழிப்பதற்காக இந்தியாவிலேயே முதன் முதலில் தனி சட்டத்தை உருவாக்கியவர் மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா. தமிழக அரசின் நடவடிக்கையால்தான் திருட்டு வி.சி.டி. முறை பெருமளவு ஒழிக்கப்பட்டது. திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து செயல்பட்டால், திருட்டு வி.சி.டி. முறையை முற்றிலும் ஒழித்து விடலாம்.
ஏனெனில் ஏதேனும் ஒரு திரையரங்கில்தான் புதிய திரைப்படத்தை வீடியோவில் பதிவு செய்து, அதனை திருட்டு வி.சி.டி.யாக வெளியிடுகின்றனர். திருட்டு வி.சி.டி. முறையை தமிழக அரசு விரைவில் முற்றிலும் ஒழிக்கும்.
டி.டி.வி.தினகரனுக்கு நன்றிதமிழக பட்ஜெட் குறித்து ‘காதில் பூ‘ என்று டி.டி.வி.தினகரன் கருத்து தெரிவித்து உள்ளார். காதில் வைத்தாலும், தலையில் வைத்தாலும் பூ எப்போதும் நறுமணத்தை தரும். அனைவருக்கும் நன்மை தரும் பட்ஜெட் என்று ஏற்று கொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
தமிழக பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கோவை, திருச்சி, தஞ்சாவூர், நெல்லை ஆகிய இடங்களில் தலா ரூ.150 கோடி செலவில் பல்நோக்கு மருத்துவமனைகள் தொடங்கப்பட்டு உள்ளன. மேலும் மதுரையில் ரூ.1,257 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்களை மத்திய அரசின் மூலமாக நிறைவேற்றி உள்ளோம்.
சென்னையில் நடந்த 2–வது உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழகத்தில் ரூ.3 லட்சத்து 413 கோடி மதிப்பிலான தொழிற்சாலைகள் இன்னும் சில ஆண்டுகளில் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.