திருவொற்றியூரில் பெருமாள் கோவில் ராஜகோபுரம் பணி முடிவது எப்போது? பக்தர்கள் எதிர்பார்ப்பு


திருவொற்றியூரில் பெருமாள் கோவில் ராஜகோபுரம் பணி முடிவது எப்போது? பக்தர்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 10 Feb 2019 10:15 PM GMT (Updated: 10 Feb 2019 6:16 PM GMT)

திருவொற்றியூரில் 10 ஆண்டுகளாக நடைபெறும் கல்யாண வரதராஜபெருமாள் கோவில் ராஜகோபுரம் அமைக்கும் பணி முடிவடைவது எப்போது? என பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

திருவொற்றியூர், 

திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. சின்னகாஞ்சீபுரம் என்று அழைக்கப்படும் இந்த கோவில், ‘கெல்லட்பெட்’ என்ற ஆங்கிலேயரால் தனது உதவியாளருக்காக கட்டப்பட்டது.

காஞ்சீபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து உற்சவர் பவழவண்ண பெருமாள் சிலையை காலடிப்பேட்டையில் உள்ள இந்த கோவிலுக்கு எடுத்து வந்ததால் இதை சின்ன காஞ்சீபுரம் என்று அழைக்கப்படுகிறது. காஞ்சீபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும் உற்சவ வழக்கத்தையே இந்த கோவிலிலும் பின்பற்றி வருகின்றனர்.

இந்த கோவிலில் ராஜகோபுரம் சிறிய அளவில் இருந்தது. எனவே அதனை இடித்துவிட்டு புதியதாக 5 நிலை கொண்ட ராஜகோபுரம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. அதற்காக 13 பேர் நிர்வாகியாகவும், 50 பேர் உறுப்பினராகவும் கொண்ட கல்யாண வரதராஜ பெருமாள் சேவா டிரஸ்ட் என்ற குழுவை தொடங்கி, அதன் மூலம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரிடமும் நிதி வசூல் செய்து ராஜகோபுரம் பணி தொடங்கப்பட்டது.

ராஜகோபுரம் அமைக்கும் பணியானது 2009-ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது. அறநிலையத்துறை ஸ்தபதி முத்தையா கண்காணிப்பின் கீழ் அவருடைய மகன் முத்துக்குமாரசாமி பெயரில் பண பரிமாற்றங்கள் செய்யப்பட்டு ரூ.1.15 கோடி திட்டமிடப்பட்டு கருங்கற்களால் ராஜகோபுர வேலைப்பாடுகள் தொடங்கப்பட்டது.

ஒவ்வொரு பணியும் ஆமைபோல் அடி அடியாக நகர்ந்ததாலும், விலைவாசி ஏற்றத்தினாலும் ரூ.1.15 கோடிக்கு போடப்பட்ட திட்டம், தற்போது ரூ.1.50 கோடியை எட்டியுள்ளது. கோபுர வேலைகளில் ஈடுபடும் பணியாளர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நிலை கட்டுமான பணிகள் காலதாமதமாகவே நடைபெற்று வந்தது.

கடந்த 10 ஆண்டுகளாக ராஜகோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டிட பணிகள் முடிக்கப்பட்டு இறுதி நிலையை எட்டியுள்ளது. தற்போது கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ளே உள்ள பெருமாள் பெருந்தேவி தாயார், ராமர், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், நவக்கிரகம் உள்ளிட்ட சன்னதிகளின் மேல் கோபுரங்கள் புனரமைக்கும் பணிகளுக்கு அனுமதி வேண்டி காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கோபுரங்களின் சிலைகள் பழுதடைந்து உள்ளதால் அவற்றை பராமரிக்க தொல்லியல் துறை மற்றும் ஐகோர்ட்டு, அறநிலையத்துறை சார்ந்த அதிகாரிகளின் அனுமதி பெறுவதற்கு காலதாமதம் ஆவதால் புனரமைப்பு பணிகள் தொடங்குவதற்கு தொய்வு ஏற்பட்டுள்ளது.

கடந்த தி.மு.க. ஆட்சியில் சட்டமன்றத்தில் மானியக்கோரிக்கையின்போது அப்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த பெரியகருப்பன், கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலுக்கு பராமரிப்பு பணிக்கு ரூ.35 லட்சம் செலவிடப்படுவதாக அறிவித்திருந்தார். ஆனால் இது குறித்து இதுவரை அறநிலையத்துறை அதிகாரிகளிடம் இருந்து தகவல் ஏதும் இல்லை என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ராஜகோபுர பணி இன்னும் முடிவடையாமல் கேள்விக்குறியாக இருப்பதை அறிந்து, திருவொற்றியூர் பகுதிக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன், இந்த பெருமாள் கோவிலுக்கு சென்று ராஜகோபுர நிலை குறித்து விசாரித்தார்.

அப்போது தொல்லியல் துறை அனுமதிக்காக காத்திருப்பதாக தெரிந்ததையடுத்து, விரைவில் பணி முடிப்பதற்காக அறநிலையத்துறை அமைச்சரிடம் பேசுவதாக தெரிவித்து சென்றார்.

ராஜகோபுரம் பணி முடிவடைந்து கும்பாபிஷேகம் நடைபெறாததால் கடந்த 10 ஆண்டுகளாக கோவிலில் முக்கிய நிகழ்வுகளான கருடசேவை, தேரோட்டம், புஷ்ப பல்லக்கு என எந்தவித வாகன புறப்பாடு இல்லாமலும், ஆண்டுதோறும் நடைபெறும் உற்சவங்களும் பெரிய அளவில் நடைபெறவில்லை. எனவே ராஜகோபுரம் பணி முடிவடைவது எப்போது? என பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

கோவில் ராஜகோபுர பணிகளை விரைவாக முடித்து, கோவில் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story